கோவையில் எலைட் மதுபானக்கடைகளில் 2வது நாளாக அலைமோதும் கூட்டம்!

எலைட் டாஸ்மாக் கடை

வழக்கமாக உயர் ரக மதுபானம் விற்பனையாகும் எலைட் மதுபான கடைகளில் கூட்டம் குறைவாகவே இருக்கும்.

 • Share this:
  கோவையில் உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யும் எலைட் மதுபான கடைகளில் இரண்டாவது நாளாக கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று தேவையான மதுபானங்களை மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்.

  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டு வார ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது அனைத்து வகையான மதுக்கடைகளும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எலைட் மதுபானக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

  நேற்று பிற்பகல் 12மணிக்கே மதுக்கடையை மூடிவிடுவார்களோ, என்று அஞ்சிய மதுப்பிரியர்கள் காலையிலே, நீண்ட வரிசையில் பை நிரம்ப மதுபானங்களை வாங்கி குவித்தனர். தொடர்ந்து, 14 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பித்ததை தொடர்ந்து நேற்றும், இன்றும் டாஸ்மாக் விற்பனை நேரம் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என உத்தரவிடப்பட்டது.

  இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வகைகளை பைகளிலும், பெட்டிகளிலும் மதுபிரியர்கள் வாங்கி செல்கின்றனர். வழக்கமாக உயர் ரக மதுபானம் விற்பனையாகும் எலைட் மதுபான கடைகளில் கூட்டம் குறைவாகவே இருக்கும்.

  ஆனால் ஊரடங்கு என்பதால் குவாட்டர், ஆப் பாட்டில்களை வாங்குவதை விட " புல் " பாட்டிலாக வாங்கி வைத்துகொண்டால் ஊரடங்கை சமாளித்து கொள்ளலாம் என்பதற்காக எலைட் மதுபான கடைகளிலும் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று விருப்பமான மதுவகைகளை வாங்கி செல்கின்றனர்.

  லட்சுமி மில்ஸ் சந்திப்பு அருகே உள்ள எலைட் மதுபான கடையில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை இல்லாததால், அருகில் இருந்த ஏ.டி.எம் மையத்திலும் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்துக்கொண்டு, மதுபானம் வாங்கும் வரிசைக்கு சென்று மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

  செய்தியாளர் - சு.குருசாமி
  Published by:Esakki Raja
  First published: