உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையுடன் பரிதவித்த வடமாநில பெற்றோர் - கட்டணமின்றி மருத்துவமனைக்கு அழைத்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்

தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் குழந்தை

கோவை அருகே உடல்நிலை பாதிக்கப்பட்ட உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையுடன் பரிதவித்த வடமாநில பெற்றோரை கட்டணமின்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தார் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கருவலூர் கிராமத்தில் உள்ள நூற்பாலையில் வட மாநிலத்தை சேர்ந்த ஷாஜகான் - மாமுனி  தம்பதியினர்  தங்கி பணியாற்றி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஷாஜகானின் மனைவி மாமுனிக்கு ஆண்  குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில்  குழந்தையின் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறாமல்  குழந்தையின் வயிறுபகுதி  வீக்கமடைந்து சுவாசிப்பதற்கு குழந்தை சிரமப்பட்டது. அன்னூர் அரசு மருத்துவமனையில் உடனடியாக குழந்தையை மேல் சிகிச்சைககாக  கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என தெரிவித்தனர்.

108 ஆம்புலன்ஸ் வர கால தாமதமான நிலையில் வடமாநில  பெற்றோரின் பரிதவிப்பை பார்த்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் சிரஞ்சீவி, பச்சிளம்  குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்துச் செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து  அவர்களை நம்பிக்கையூட்டினார்.

பின்னர் பச்சிளம் குழந்தை  அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து கோவில்பாளையம் மற்றும் சரவணம்பட்டி காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் நேரத்தில் டிராபிக் அதிகம் இருக்கும் நிலையில் இரு காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், குழந்தையை ஏற்றி வரும்  ஆம்புலன்ஸ் செல்வதற்கான பாதையை போலீசார் ஒழுங்குபடுத்தி கொடுத்தனர்.


Also read... வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் - 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இதனையடுத்து அன்னூர் அரசு மருத்துவமனையிலிருந்து நேற்று மதியம் 12.45  குழந்தையை ஏற்றிக்கொண்டு கிளம்பிய  ஆம்புலன்ஸ் ஓட்டுனர் 1.12 மணிக்கு  27 நிமிடங்களில் 30 கி.மீ தொலைவை கடந்து  குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

இதனையடுத்து தற்போது அந்தபச்சிளம்  குழந்தை  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தையை காப்பாற்ற தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சீரஞ்சிவி மேற்கொண்ட முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: