வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் மற்றும் புரெவி புயல் வரிசையாக வந்ததன் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உட்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு சில நாட்களுக்கு லேசான மழை பெய்து வந்தது.
சென்னையை பொறுத்தவரை, பகல் நேரங்களில் வெயில், மாலை நேரங்களில் பனிப்பொழிவு என வித்தியாசமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இந்த நிலையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15-ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16-ஆம் தேதி, முதல் 18-ஆம் தேதி வரை கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.