தமிழகத்தில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருக்கிறது- முதலமைச்சர்

news18
Updated: September 14, 2018, 9:36 PM IST
தமிழகத்தில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருக்கிறது- முதலமைச்சர்
கோப்புப்படம்.
news18
Updated: September 14, 2018, 9:36 PM IST
தமிழகத்தில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே தற்போது அனல் மின் நிலையத்தில் இருப்பு உள்ளதால், நிலக்கரி பற்றாக்குறையை போக்கவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில இடங்களில் ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவியதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

மின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, காற்றாலை மின்சாரம் கிடைக்காவிட்டாலும் அனல்மின் நிலையம் மூலமாக தமிழகத்திற்கு தட்டுப்பாடில்லாமல் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் மின் உற்பத்திக்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு நிலக்கரி தேவைப்படும் நிலையில், 22,400 மெட்ரிக் டன் முதல் 26,000 மெட்ரிக் டன் அளவுக்கே நிலக்கரி கிடைத்து வருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே அனல் மின் நிலையத்தில் இருப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதிய நிலக்கரி இல்லாமல் சில அனல்மின் நிலையங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காற்றாலை மின் உற்பத்தியும், செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிவுடையும் என்பதால் நிலக்கரி தேவை அவசியமாகிறது என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரியை தமிழகத்திற்கு அளிக்க நிலக்கரி அமைச்சகத்திற்கும், ரயில்வே அமைச்சகத்திற்கும் அறிவுறுத்த பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...