புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு

முதலமைச்சர் பழனிசாமி

முதல் கட்டமாக நாகை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

  • Last Updated :
  • Share this:
'கஜா' புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் மற்றும் திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக ரயில் மூலம் நாகைக்கு இன்று காலை சென்றடைந்தார்.

'கஜா' புயல் தாக்கத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போதும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. இதில், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில், கடந்த 20-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மழை பெய்ததால் இதர பாதிப்பு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் திரும்பினர். ஆனால், பாதிப்பு குறித்து, களத்திற்கு நேரடியாக செல்லாமல், ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி, இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காரைக்கால் விரைவு ரயிலில் மூலமாக, நேற்று இரவு புறப்பட்டார். அவருடன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் சென்றுள்ளனர். நாகைக்கு இன்று அதிகாலை சென்றடைந்த முதலமைச்சர், விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.

எங்கெங்கு செல்கிறார்?

இன்று காலை 8 மணிக்கு ஆய்வுப் பணியை தொடங்கும் முதலமைச்சர், முதல் கட்டமாக நாகை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குகிறார்.

பின்னர் பிரதாபராமபுரம் சென்று அங்கு பாதிக்கப்பட்ட வீடுகள், விவசாய நிலங்களில் ஆய்வு செய்கிறார்.

அதைத் தொடர்ந்து காமேஷ்வரம், விழுந்தமாவடியில் மீனவ கிராமங்களில் புயல் பாதிப்பு பகுதிகளில் பார்வையிடுகிறார்.

வேட்டைக்காரனிருப்புக்கு சென்று, நிவாரண முகாமில் தங்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறியவுள்ளார்.

தொடர்ந்து, கோவில்பத்துவில் அமைக்கப்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், சேமிப்பு கிடங்கு கட்டடங்கள் சேதமாகியுள்ளதை முதலமைச்சர் பார்வையிடுகிறார்.

அங்கிருந்து புஷ்பவனம் சென்று, கடல்நீர் புகுந்து சேறும் சகதியுமாகியுள்ள அந்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

பின்னர், பெரியபுத்தகை, வேதாரண்யம், ஆதனூர், ஆயக்காரன்புலம், மருதூர் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்

இதையடுத்து, பிற்பகல் 2 மணியளவில் திருவாரூர் சென்றடையும் முதலமைச்சர் பழனிசாமி,

தெற்குபிடாகை, தென்பாதி, கட்டிமேடு, திருத்துறைப்பூண்டியில் சேதமடைந்த வீடுகள், விளைநிலங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.

அத்துடன், மணலி, திருநெய்ப்பேர், மாங்குடி, திருவாரூரிலும் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார்.

இறுதியாக, திருவாரூரில் இருந்து ரயில் மூலம் இன்று இரவு சென்னை திரும்புகிறார்.
Published by:Yuvaraj V
First published: