நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர
மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். காணொளி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பல மாநிலங்களில் பெட்ரோல் - டீசல் விலை ரூ.100 தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பணவீக்கம் பல குடும்பங்களை பாதிப்படைய செய்கிறது.
குஜராத், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் வரியைக் குறைத்தாலும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை செய்யவில்லை. இதனால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இது ஒரு வகையில் இந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று தெரிவித்து இருந்தார்.
Also Read : உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து - காரணம் என்ன?
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதிலளித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிக்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வில்லை என்றும், மாநில அரசு குறைக்காத காரணத்தினால் தான், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியவில்லை என பிரதமர் சொல்கிறார். பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக பேசியுள்ளார்.
சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பெட்ரோல் மீதான வரியை குறைத்து வேடம் போட்டது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசுக்கு முன்னாடியே பெட்ரோல் மீது விலையை மாநில அரசு குறைத்தது தமிழக அரசு. யார் பெட்ரோல் விலையைக் குறைத்தார்கள், யார் பெட்ரோல் விலையைக் குறைப்பதாக நடித்தார்கள் என மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்று முதல்வர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.