முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "இந்த நடவடிக்கை நெருக்கடி நிலை காலத்தை நினைவூட்டுகிறது" - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

"இந்த நடவடிக்கை நெருக்கடி நிலை காலத்தை நினைவூட்டுகிறது" - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

மாதிரி படம்

மாதிரி படம்

CM Stalin Write Letter To PM Modi | டெல்லி முதலமைச்சர் மணீஷ் சிசோதியாவை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை கைது செய்யப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர் இந்தியா முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 5 தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தற்போது கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், வேறுபட்ட கொள்கைகளும் பல்வேறு அரசியல் கட்சிகளும்தான் இந்திய ஜனநாயகத்தின் இதயத்துடிப்பு என்பதைத் தாங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அதேபோல, சட்டத்தின் ஆட்சியும் தனிமனித சுதந்திரமும் நமது குற்றவியல் நீதிமுறையின் அடித்தளமாகும். அப்படியிருக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்து, அரசியல் சட்டம் உத்தரவாதம் அளிக்கும் தனிநபர் சுதந்திரத்தை மீறி அவருக்கு வலியையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பது வேதனையும் ஏமாற்றமும் அளிக்கிறது. குற்றவியல் நீதிமுறையின் அனைத்து விதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதுடன், வழக்கமான சட்ட நடைமுறைகளும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் தனிப்பட மனநிறைவுக்காக மீறப்பட்டிருக்கின்றன.

எங்கெல்லாம் மத்திய ஆளுங்கட்சிக்குத் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வரும் நிலையைக் கடந்த ஒன்பது ஆண்டுகளில் காண இயலும். ஈவிரக்கமின்றி மீண்டும் மீண்டும் இந்த விசாரணை அமைப்புகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் ஆயுதமாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் மீது மட்டுமே ஏவப்பட்டு வருகின்றன.

உண்மையில்லாத கலப்படக் குற்றச்சாட்டுகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான கருவிகள் ஆகிவிட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சோதனைகள் நடத்துவது, கட்சித் தாவல் தடைச்சட்டத்தை அப்பட்டமாக மீறித் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பது, எதிர்க்கட்சித் தலைவர்களையும், பா.ஜ.க.வுக்குத் தொந்தரவாக இருக்கும் தலைவர்களையும் கைது செய்யப் புலனாய்வு அமைப்புகளை ஆணவத்துடன் ஏவி விடுவது போன்ற அராஜகங்கள் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக மட்டுமல்லாமல், நெருக்கடிநிலைக் காலத்தை நினைவூட்டுபவையாகவும் அமைந்துள்ளன.

புலனாய்வு அமைப்புகளையும் ஆளுநர் உள்ளிட்ட அரசியல் சட்டப் பதவிகளையும் தவறாகப் பயன்படுத்துவது இந்தியாவின் துடிப்பான மக்களாட்சியை வலுப்படுத்த ஒருபோதும் உதவாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். உரிய சட்ட நடைமுறைகளை மீறி மணீஷ் சிசோடியாவைக் கைது செய்த நாளானது மத்திய பா.ஜ.க அரசின் ஆட்சிக்காலத்தின் கருப்பு நாளாகவே நினைவில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஒன்பது ஆண்டு மத்திய பா.ஜ.க ஆட்சியில் நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்புகள் மற்றும் குறிப்பாக ஆளுநர் முதலிய அரசியல் சட்டப் பதவிகளுக்கென்று எஞ்சியிருக்கும் மாண்பைக் காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சட்ட நடைமுறைகளையும், 70 ஆண்டு பழமையான நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் கொச்சைப்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: CBI, CM MK Stalin, PM Modi