பிரதமர் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேசிய பேச்சு, ஒரு
திமுக தலைவர் அரசியல் மேடையில் நின்றுகொண்டு தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு பேசிய பேச்சைப் போல இருந்தது என
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும்கூட பேசினார். அதில் பாரத பிரதமரின் பேச்சு எப்படி இருந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். தமிழ் கலாசாரத்தை தனது தோளில் தூக்கி, இந்த மண்ணின் மீது எவ்வளவு மரியாதை இருக்கிறது, இந்த மண்ணை எப்படி நேசிக்கிறேன் என்று பிரதமர் பேசும்போது, ஒவ்வொரு வார்த்தையிலுமே தெரிந்தது. அது எல்லாவற்றையும் தாண்டி 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் 11 திட்டங்களை அர்ப்பணித்துவிட்டு சென்றிருக்கிறார். இலங்கைக்காக செய்திருக்கிற உதவிகள் குறித்தும் பேசியிருந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு, ஒரு திமுக தலைவர் அரசியல் மேடையில் நின்றுகொண்டு தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு பேசிய பேச்சைப் போல இருந்தது. பாஜகவின் கடமை, முதல்வர் பேசிய ஒவ்வொரு வரிக்கும்கூட, அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும்கூட இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளிக்க வேண்டியது எங்களது கடமையாக இருக்கிறது.
தமிழக வளர்ச்சி பற்றி முதல்வர் பேசினார். தமிழகத்தின் வளர்ச்சி என்பது நம்முடைய வளர்ச்சி மட்டுமா? இந்த வளர்ச்சிக்காக வேறு யாரும் வேலை செய்யவில்லையா? யாரும் உறுதுணையாக இல்லையா? தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழ் மொழி பேசாதவர்கள் 25 லட்சம் பேர் உள்ளனர். திருப்பூர், ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் 25 லட்சம் தமிழ் மொழி சாராத தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே வாக்குரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியர் என்ற அடிப்படையில் இங்கிருக்கக் கூடிய தமிழ் மக்களுக்காக வேலை செய்துகொண்டுள்ளனர். எனவே இந்த பிரிவினைவாதப் பேச்சை விட்டுவிட்டு, முதல்வர் பேசும்போது வரலாறு என்ன இருக்கிறதோ, அதை மட்டும் பேச வேண்டும்.
Also Read : தமிழகம் பிரதமர் மோடியை விரும்புகிறது - அமித் ஷா தமிழில் ட்வீட்
2021-ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு என்று 13 இடத்தில் குறிப்பிட்டுள்ளனர். நேற்று முதல்வர், தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு என்று தான் எழுதியதை மறந்துவிட்டு, மேடையில் ஒன்றிய அரசு என்று 11 முறை குறிப்பிட்டிருக்கிறார். எதனால் முதல்வருக்கு இந்தக் குழப்பம்?
நீட் பொம்மையை வைத்து நாடகமாடுகின்றனர். பிரதமர் உங்களைப் போல நிறைய பேரை பார்த்துவிட்டு வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அரசியல் என்பது கும்மிடிப்பூண்டியிலிருந்து கோபாலபுரம் வரையிலானது. மோடியின் அரசியல் என்பது இந்திய அரசியலை தாண்டி உலக அரசியலுக்கு சென்றுவிட்டார். எனவே, பிரதமரிடம் சிறுபிள்ளை போல் பேசாமல் சரியான முறையில் பேசுங்கள். அவ்வாறு பேசினால், நீங்கள் கேட்காமல் தமிழகத்திற்கு வரவேண்டிய வேலைகளை பாஜக செய்யும். எனவே முதல்வர் இதுபோன்ற நாடகங்களை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான அரசியலை கையிலெடுத்து அடுத்த 4 ஆண்டு காலம் வழிநடத்துவார் என்று நான் நம்புகிறேன்.
திராவிட மாடல் வளர்ச்சி என்று நீங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள். ஒவ்வொரு துறை வாரியாக புத்தகம் வெளியிடப் போகிறோம், ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு அமைச்சராக இன்னும் 15 நாட்களில் ஊழல் பட்டியல் வரும். புத்தகத்தை வெளியிடுவோம். தமிழக மக்களுக்கு தெரியும், இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியவேண்டும்.
முதல்வர் யாரு, நம்பர் 1 முதல்வர் என்றால், ஊழலில் நம்பர் 1 முதல்வர் என்பதால் சொல்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் இதே இடத்தில் பேப்பர் ரிலீஸ் செய்வோம். இதன் மூலம் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகல் இருக்கும். பதவி விலகியே ஆகவேண்டும்” என்று அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.