பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர் நம்பிக்கை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜனவரி 29ம் தேதி ஆளுநரை சந்தித்தபோது 7 பேர் விடுதலை தொடர்பாக வலியுறுத்தியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

  • Share this:
    ராஜிவ் கொலைவழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலையில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எழுந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட எழுவர் விடுதலை விவகாரத்தில் திமுக தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அதற்கான தெளிவான விளக்கங்களை தருவதாக தெரிவித்தார்.

    தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றியதாகவும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் எனவும் அமைச்சரவை முடிவு செய்ததாக கூறினார்.

    அதனை தொடர்ந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் பேரறிவாளன் உட்பட மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

    மேலும், ஜெயலலிதா அமைச்சரவையில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஏழுபேரையும் முன் விடுதலை செய்யவும் முடிவு செய்ததையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி பேசினார். எழுவர் விடுதலை தொடர்பாக அடிக்கடி அறிக்கை வெளியிடும் திமுக பேரறிவாளன், சாந்தன், முருகனை விட்டுவிட்டு நளினியின் தண்டனையை மட்டும் குறைக்க முடிவெடுத்தது ஏன் என்ற கேள்விக்கு தற்போதுவரை பதில் இல்லை எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

    மேலும், கருணாநிதி அமைச்சரவையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனுவை நிராகரிக்கலாம் என்ற அமைச்சரவை முடிவில் அப்போதய அமைச்சர்களாக இருந்த துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என் நேரு உள்ளிட்ட ஏழுபேரும் கையெழுத்து இட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். அதிமுக அரசை பொறுத்தவரை 7 பேருக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என உண்மையாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், ஆளுநரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 7 பேர் விடுதலை தொடர்பாக விரைவில் முடிவெடுக்க வலியுறுத்தி வருகிறோம். எனவும் பேசினார்.

    இறுதியாக, ஜனவரி 29ம் தேதி ஆளுநரை சந்தித்த போது 7 பேர் விடுதலை தொடர்பாக வலியுறுத்தியதாகவும். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் பேசினார்.

    மேலும் படிக்க... ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

    திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு 7 பேர் விடுதலைக்காக போராடுவது போல், தோற்றத்தை ஏற்படுத்தி வரும் தேர்தலில் அனுதாபத்தை பெறத்தான் நாடகம் நடத்துவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்போது குற்றம் சாட்டினார்.
    Published by:Suresh V
    First published: