தன்னலமற்று பணியாற்றும் ஊழியர்களை ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார் - முதல்வர் பழனிசாமி

மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

இத்தருணத்தில் மு.க.ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது, அவரது சந்தர்ப்பவாத அரசியலையே காட்டுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

 • Share this:
  கொரோனாவைத் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருப்பதாக விளக்கமளித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னலமற்று பணியாற்றும் ஊழியர்களை ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக பதிலளித்துள்ளார்.

  மு.க.ஸ்டாலினின் கடிதத்துக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சீனாவில் நோய்த் தொற்று இருப்பதை அறிந்தவுடன், ஜனவரி மாதத்திலேயே கொரோனா பரிசோதனைக் கருவிகள், உடல் கவச உடைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

  குறுகிய காலத்திற்குள் தமிழகத்தில் 20 சோதனை மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 ஆயிரத்து 371 படுக்கைகள் கொண்ட தனிமைப் பிரிவுகள், 3 ஆயிரத்து 371 வெண்டிலேட்டர்கள், 5 ஆயிரத்து 713 தனிமைப்படுத்தும் கட்டடங்களை தயார்நிலையில் வைத்திருப்பதாகவும்,

  போதுமான முகக்கவசங்கள், கவச உடைகள் இருப்பில் உள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

  மிக முக்கிய பிரச்னையான கொரோனா பரவுவதை தடுக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்துவதை வரவேற்காமல், கண்டனம் தெரிவிப்பது ஸ்டாலினின் இரட்டை வேடத்தையே காட்டுவதாக முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

  தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மத்திய அரசு மொத்தமாக 870 கோடியே 88 லட்ச ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும்,

  ஊரடங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டுவருவதன் காரணமாக நோய்த் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

  இத்தருணத்தில் மு.க.ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது, அவரது சந்தர்ப்பவாத அரசியலையே காட்டுவதாகவும்,

  கொரோனாவை கட்டுப்படுத்த இரவு, பகலாக தன்னலமற்று பணியாற்றும் ஊழியர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

   
  Published by:Yuvaraj V
  First published: