2500 ரூபாய் பொங்கல் பரிசு அறிவிப்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிமுக அரசு மீது, திமுக பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் முதலமைச்சர் தூத்துக்குடி சென்றார். அவரை, சரோஜா, உதயகுமார், கடம்பூர் ராஜு, ராஜலெட்சுமி ஆகிய அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழக அமைச்சர்கள் 8 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய 97 பக்க புகார் மனுவை ஆளுநரிடம் திமுக வழங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தங்களது அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திமுக பொய்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக சாடினார். மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல், தங்கள் அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாகவும் ஆதங்கம் தெரிவித்தார்.
Also read... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது மு.க.ஸ்டாலின் ஊழல் புகார் - ஆளுநரிடம் மனு
மேலும், முந்தைய ஆட்சியில் திமுக முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர் மீது பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக முதலமைச்சர் கூறினார். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் திமுகவினர், தற்போதைய அதிமுக அரசு மீது அவதூறு பரப்புவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசிவிடக் கூடாது என்பதற்காக, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். எனவே, பொதுமக்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.