ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள காட்ரம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று காலை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகிய மூன்று பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த சோமங்கலம் போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த செய்தி அறிந்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதனிடையே உயிரிழந்த தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

விஷவாயு தாக்கி பலியானவர்கள்
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், காட்ரம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் கழிவு தொட்டியை இன்று (14.2.2021) சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பாக்கியராஜ், திரு. முருகன் மற்றும் திரு. ஆறுமுகம் ஆகிய மூன்று நபர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த திரு. பாக்கியராஜ், திரு. முருகன் மற்றும் திரு. ஆறுமுகம் ஆகிய மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.