தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இன்று பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை சனிக்கிழமை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளின் விருப்பத்தை ஏற்று, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரிய சோரகையில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களாக மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர், தற்போது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
முன்னதாக, தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Also read... 2021-ல் யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன், பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல்கட்டப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
திமுக உயர்மட்டக் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.