Home /News /tamil-nadu /

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் அக்னிபத் என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. நான்கு ஆண்டுகள் முடிந்ததும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களில், 75 சதவிகிதம் பேர் பாதுகாப்பு படையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இதனால், ராணுவத்தில் சேர உடற்தகுதியில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் வேலை என்றால் அதற்கு பின்னர் நிலையான வேலை பெற, ஏற்கனவே படித்து தயாராக இருக்கும் மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்றும் இத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    பீகார், உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததோடு ரயில்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

    மேலும் படிக்க: அக்னிபாத்துக்கு எதிராக ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன? அரசாங்கம் என்ன சொல்கிறது

    தொடர்ந்து, அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினும் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “அக்னிபத்” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள “அக்னிபத்” திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மாதமிருமுறை வெளிவரும் பிரபல ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், முன்னாள் மேஜர் ஜெனரல் ஜி.டி பக்ஸி, “இத்திட்டத்தைக் கேள்விப்பட்டுத் திடுக்கிட்டுப் போனேன். For God’s sake please don’t do it” என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    இன்னொரு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் கத்யன், “4 ஆண்டு ஒப்பந்தப் பணியில் சேரும் ராணுவ வீரர், தன் உயிரைத் தியாகம் செய்யும் அளவிற்குப் போரில் பணியாற்றுவார் என எதிர்பார்க்க முடியாது” என்று கவலை தெரிவித்துள்ளார்.

    அரசியல் கட்சிகள் தவிர, நாட்டின் பாதுகாப்புப் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும், “ராணுவப் பணி பகுதிநேரப் பணி” அல்ல என்றும், “இதுபோன்ற தேர்வு, ராணுவத்தில் கட்டுப்பாட்டைக் கெடுக்கும்” என்று கூறி, இந்தத் தேர்வுத் திட்டம் ஆபத்தானது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப் பணி எனும் லட்சியத்தைச் சிதைக்கும் இந்த “அக்னிபத்” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Agnipath, MK Stalin, PM Modi

    அடுத்த செய்தி