தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப் படகினைச் சூழ்ந்துகொண்டு, இரும்புக் கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தில் தமிழ்நாடு மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயமும் 5 மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி மற்றும் 200 கிலோ மீன் உள்ளிட்ட சுமார் 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இலங்கை நாட்டினர் எடுத்துச் சென்றுவிட்டனர். காயமடைந்துள்ள மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வேதனையளிக்கிறது. மத்திய அரசு இதைக் கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், இலங்கை நாட்டினரால் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கவும் தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் படுகாயமுற்று தற்போது கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிக்கை பெற்றுவரும் முருகன் என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, External Minister jaishankar, Fisherman, Srilanka