ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'மக்கள் திருப்தியா இருக்காங்க.. எதிர்க்கட்சி விமர்சனமெல்லாம் கவலையில்லை' - சீர்காழி விசிட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

'மக்கள் திருப்தியா இருக்காங்க.. எதிர்க்கட்சி விமர்சனமெல்லாம் கவலையில்லை' - சீர்காழி விசிட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

“எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதை எல்லாம் நாங்கள் செய்ய முடியாது”

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Cuddalore, India

  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையான ஆய்வு செய்து பிறகு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

  வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்து தாழ்வு நிலை காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளையும், ஆயிரக்கணக்கான விளை நிலங்களையும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இந்நிலையில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த புகைப்படங்களை பார்வையிட்ட முதலமைச்சருக்கு, மழை சேதம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் எடுத்துரைத்தார். மேலும், நிரந்தர வெள்ள தடுப்பு பணியை மேற்கொள்ள பரவனாற்றில் செயல்படுத்த உள்ள அரிவாள் மூக்கு திட்டத்தை பற்றி முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

  அதன்பின், கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டங்களில் மழை பாதிப்பால் வீடுகளை இழந்து தவிக்கும் 14 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக பார்வையிட வந்த முதலமைச்சருக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து வல்லம்படுகையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களின் புகைப்படங்களை முதலமைச்சர் பார்வையிட்டார்.

  கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு சென்ற முதலமைச்சர், பச்சை பெருமாள் நல்லூரில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதேபோன்று உமையாள்பதி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முதலமைச்சர் பார்வையிட்டார்.

  அதைத்தொடர்ந்து சீர்காழி புதிய பேருந்து நிலையம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 2 ,000 நபர்களுக்கு அரிசு, பருப்பு, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.

  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், சீர்காழி, மயிலாடுதுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகக் கூறினார். அரசின் நடவடிக்கையால் மக்கள் திருப்தியாக உள்ளதாகக் கூறிய முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் விமர்சனம் பற்றி கவலையில்லை என்றும் மக்கள் தெரிவித்த குறைகள் உடனடியாக சரி செய்யப்படும் எனவும் கூறினார்.

  மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக கணக்கீடு செய்த பிறகு அனைவருக்கும் நிவாரணம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

  இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதை எல்லாம் நாங்கள் செய்ய முடியாது” என பதிலளித்தார்.

  இதனையடுத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையான ஆய்வு செய்து பிறகு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, Flood, Heavy Rainfall