தமிழகத்தில் திமுக அரசு 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்பதற்காக பல முறை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளன. ஆன்லைன் ரம்மியை தடை செய்தது, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு ஒப்புதல் என முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே இரண்டு முறை அமைச்சரவை மாற்றமும் நடைபெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. புதிதாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு முதல் முறையாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அன்றைய தினம் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மரபுப்படி ஆளுநரின் உரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால், அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.
மேலும் கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள், புதிய அறிவிப்புகள், எதிர்கட்சியினரை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் முடிவெடுக்கப்படவுள்ளது. புதிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட அமைச்சர்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது, எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் முதல்வர் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin