சென்னையில் தமிழில் காது மூக்கு தொண்டை அறிவியல் மாநாடு நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, தமிழ்நாடு காது, மூக்கு தொண்டை மருத்துவக் கூட்டமைப்பி தலைவர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா கால அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
விழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “பொதுவாக இது போன்ற மாநாடுகள் ஆங்கிலத்தில் நடைபெறும். கோட் சூட் அணிந்த நபர்கள் கலந்துகொள்ள ஸ்டார் ஓட்டலில் நடைபெறும். ஆனால் இந்த மாநாட்டை நடத்துபவர்கள் வேட்டி அணிந்து, கலைஞரால் தொடங்கப்பட்ட முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெறுகிறது. கலைஞர் இருந்திருந்தால் இப்படியொரு மாநாடு நடைபெறுவது குறித்து எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார். மோகன் காமேஸ்வரனின் தந்தையிடம் நான் சிகிச்சைப் பெற்றுள்ளேன். கலைஞர் குடும்பத்திற்கே காமேஸ்வரனும் மோகன் காமேஸ்வரனும் தான் மருத்துவர்கள்.
நான் சிறையில் இருந்த காலத்தில் எனக்கு காது பிரச்னை ஏற்படவே நான் அரசு பொது மருத்துவமனைக்கு அவரை பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன். நான் வருவது தெரிந்து எனது தாய் எனக்கு சூப் கொண்டு வருவார். காவலர்களை வெளியே நிற்க வைத்து விட்டு அவரது அறையில் இருக்கும் எனது தாயை சந்தித்து சூப் வழங்க சொல்வார் மருத்துவர் காமேஸ்வரன். காதுகளுக்கான cochlear implant இலவசமாக ஏழைகளுக்கு வழங்க தூண்டியவர் மோகன் காமேஸ்வரன் தான்.
சில நாட்கள் முன், சமூக வலைதளத்தில் வைரலான வீடியோவில் வட மாநில பெண் தன் மகனுக்கு cochlear சிகிச்சை கிடைக்கப்பெற்றது என மகிழ்ச்சியாக கூறினார். தமிழ்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக cochlear சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கு தொண்டை முக்கியம். தொண்டை போய் விட்டால் எங்கள் தொண்டே போய்விடும்” என கூறினார்
தொடர்ந்து பேசிய அவர், “நிர்வாகத்தில், ஆட்சியில், கோயில்களில் நீதிமன்றங்களில் தமிழ் என எங்கும் தமிழ், தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாக இந்த அரசு உள்ளது. மருத்துவ நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. அதே போன்று தொழில்பயிற்சிகளுக்கான படிப்புகளும் தமிழில் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவம் அதிக செலவு செய்ய வேண்டியதாகி வருகிறது. அரசு மக்களை தேடி மருத்துவம் காப்பீட்டு திட்டம் என முயற்சிகள் எடுத்தாலும் ஏழை மக்கள் அதிகம் கட்டணம் செலுத்தாத வகையில் அவர்களுக்கு சேவை வழங்க தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும்” என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, CM MK Stalin