2023ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பரபரப்பு தீர்மானத்தால் கோபமுடன் பாதியிலேயே வெளியேறினார். சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் தான் இணையத்தில் ஹாட் டாப்பிகாக மாறி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநரை அவமதித்துவிட்டார்கள் என பாஜகவினர் தங்களது எதிர்ப்பையும் தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் வெளியேறியது சட்டமன்ற மாண்பு இல்லை என திமுக கூட்டணி கட்சியினரும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரைக்காக கூடியது. சட்டமன்றத்திற்குள் ஆளுநர் வந்தபோது மற்றும் அதன் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என முழக்கம் எழுப்பினர். என் இனிய சகோதர, சகோதரிகளே புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் எனக் கூறி உரையைத் தொடங்கினார் ஆளுநர். ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பியவாறு பேரவையின் மையப் பகுதிக்கு வந்து கண்டனங்களை பதிவு செய்தனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் உரையில், “கொரோனா 2 மற்றும் 3வது அலையை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் பறிக்கிறது, காலை உணவுத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது” என பேசினார். ஆளுநர் தனது உரையில் திராவிட மாடல், சமூகநீதி, பெரியார், அண்ணா, அம்பேத்கர், மாநில மொழிகளை அலுவல் மொழியாக்குவது உள்ளிட்ட வார்த்தைகள் இருந்தபோதும் அதனை தவிர்த்துவிட்டார். ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழாக்கம் செய்தபோது இந்த வார்த்தைகள் இடம்பெற்றன.
வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் உரை முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்த அவர், அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே, தேசிய கீதம் இசைக்கும் முன்பு பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த சபாநாயகர், அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அறிவித்தார்.
இதனிடையே சட்டசபை நிகழ்வுகள் ஒருபக்கம் பரபரப்பாக செல்ல மறுபுறம் இணையத்தில் இந்த நிகழ்வுகள் தொடர்பான கருத்துகள் வேகம் எடுக்க தொடங்கியது. சட்டசபையில் ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாமல் நெட்டிசன்களும் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறும் போது முதல்வரின் ரியாக்ஷன் உள்ளிட்ட புகைப்படங்களை பதிவிட்டு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். #GetOutRavi என்ற ஹேஷ்டேக் மட்டுமின்றி ஆளுநர் ரவிக்கு எதிராக மேலும் பல ஹேஷ்டேக்குகளும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, RN Ravi, TN Assembly