உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124 வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளையும் அவர் கண்டு ரசித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களாக மலர் கண்காட்சி நடத்தப்பட வில்லை. இந்நிலையில் கோடை விழாவையொட்டி 124வது மலர்க் கண்காட்சியை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியினை இன்று ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.
பின்னர் மலர் கண்காட்சியினை அவர் பார்வையிட்டார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மலர் கண்காட்சியில் உதகை 200 வது ஆண்டைக் குறிக்கும் விதத்தில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஊட்டி 200, ஒரு லட்சம் கொய்மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முகப்பு ஆகியவற்றின் முன்பாக நின்று முதல்வர் ஸ்டாலின் புகைபடம் எடுத்து கொண்டார். பின்னர் 124வது கண்காட்சி வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ண மலர்களை நேரில் பார்வையிட்ட அவர், கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டு இருந்த மலர்களையும் கண்டு ரசித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர், குறும்பர், கோத்தர் உட்பட ஆறு பழங்குடியினரின் வடிவங்கள் மலர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஜெரேனியம், சைக்லமன் உட்பட 275 ரகங்களில் 5.5 லட்ச செடிகளில் வண்ண வண்ண மலர்களும், 35,000 பூந்தொட்டிகளில் பூத்துள்ள பால்சம், லில்லியம், மேரிகோல்டு, டேலியா,பெட்டுனியா உள்ளிட்ட பல விதமான மலர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
Also read... நெஞ்சுக்கு நீதி படத்தினை பார்க்க இரவு முதலே திரையரங்கில் குவிந்த ரசிகர்கள்
இவற்றை கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின், வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் பார்வையிட்டார். பின்னர் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைநிகழ்ச்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு ரசித்தார்.
ஈரோடு இசை பள்ளி மாணவ-மாணவியர் திருக்குறள் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினர். அதை தொடர்ந்து தோடர், குறும்பர் , கோத்தர் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனமாடினர். இவற்றை கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின் இத்தாலியன் கார்டனில் வைக்கப்பட்டு இருந்த மலர்களை பார்வையிட்ட பின் தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று உதகையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த மலர் கண்காட்சி இன்று துவங்கி 5 நாட்கள் நடைப்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.