தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், "மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடிவரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்" என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள். மேலும், கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளார்கள்.
அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் “கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி, அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர், முக்கிய அமைச்சர்கள் அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள்.
இந்த ஆய்வின்போது குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரசு மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம் குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு செய்யவுள்ளார்கள்.
ஆய்வின் முதல் நாளான பிப்ரவரி 1ஆம் தேதியன்று முதலமைச்சர், அப்பகுதிகளில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கருத்துக்களையும். கோரிக்கைகளையும் கேட்டறிகிறார். அன்று மாலை நான்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை சரக துணைத்தலைவர். காவல்துறைத் தலைவர் (வடக்கு) ஆகியோருடன் மேற்படி மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்வார்.
அன்றைய தினமே இந்த ஆய்வின் மற்றொரு பகுதியாக, அமைச்சர் பெருமக்கள், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியத் துறைகளைச் சார்ந்த அரசுச் செயலாளர்கள் துறைத் தலைவர்கள் ஆகியோர் மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்வார்கள். கள ஆய்வில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 2ஆம் நாள் நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டத்தின்போது முதலமைச்சரின் முன்னிலையில் இப்பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்த ஆய்வுக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர். முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட உயர் அலுவலர்களுடன், முதலமைச்சர் விரிவான ஆய்வினை மேற்கொள்வார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, MK Stalin, TN Govt