நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார். சரோஜினி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு உடல்நிலை குறைவு காரணமாக திடீரென காலமானார்.
இந்நிலையில் வடிவேலுவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், இரங்கல் தெரிவித்த அறிக்கை வெளியிட்ட முதல்வர் “நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாதஇழப்பாகும். 'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வடிவேலுவின் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார்.
இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதையடுத்து இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் அவர் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் ஒப்பந்தமானார். இப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் பெரிய அளவில் ரசிகர்களிடையே ரீச் ஆகவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vadivelu, CM MK Stalin, Vadivelu, Vadivelu family