வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு,
சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிந்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் தன் தோழி வீட்டின் மாடியிலிருந்து தவறுதலாக கீழே விழுந்ததில், அவருடைய இரண்டு கால் மூட்டுகளும் கடுமையாக சேதமடைந்தன, கால்கள் மட்டுமின்றி சிந்துவின் முகம் மற்றும் தாடையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்துவுக்கு 2 மேஜர் சர்ஜரிகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டது. படுத்தப்படுக்கையாக கிடந்த சிந்து, மெல்ல மெல்ல குணமடைந்து தற்போது எழுந்து நிற்கும் அளவுக்கு உடல்நலம் தேறியுள்ளார். ஆனாலும் சிந்து, இன்னமும் சுயமாக நடக்க முடியாத நிலையில் தான் இருக்கிறாள். மேலும் சிந்துவால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கவும் முடியாது.
இப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் பொதுத் தேர்வு எழுதிய சிந்து, தேர்வறையில் இருந்த அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்றார். சிந்துவை தேர்வு எழுத தூக்கி வந்த அவரின் தந்தை சக்தி, ஒரு தேநீர் வியாபாரி ஆவார். தன் மகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான நிதி வசதி தன்னிடம் இல்லை. டீ விற்கும் என்னால் பெருந்தொகையை ஏற்பாடு செய்ய முடியாது, எனவே சிந்துவின் மேல் சிகிச்சைக்கு தமிழக அரசு உதவி புரிய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்திருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் கூட, ஆர்வத்துடன் தேர்வு எழுதிய மாணவி சிந்துவுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, சிந்துவின் முழு சிகிச்சைக்கான செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்திருந்தார்.
Must Read : முன்பதிவு பெட்டிகளில் ஏறி வடமாநிலத்தவர்கள் அட்டகாசம்.. பயணிகள் வாக்குவாதம் - செங்கல்பட்டில் 1 மணிநேரம் நிறுத்தப்பட்ட ரயில்
முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் குழுவினால் சிந்துவுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், முதல்வரை சந்திக்க ஆசை என சிந்து, அமைச்சர் சுப்ரமணியனிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, சிந்துவிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், தொடர்ந்து சிந்துவிற்கு இன்னும் ஒரு வருடம் வரை பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கருதி அவரது தந்தைக்கு மருத்துவமனை வளாகத்திற்குள் தேநீர் கடை வைத்து வியாபாரம் மேற்கொள்ள ஒரு வருடத்திற்கு அனுமதி அளித்து அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.