காவலர்களுடன் பொங்கல் பொங்கி தைத்திருநாளை கொண்டாடிய முதல்வர்

காவலர்களுடன் பொங்கல் பொங்கி தைத்திருநாளை கொண்டாடிய முதல்வர்

பொங்கல் கொண்டாடிய முதல்வர் பழனிசாமி

எடப்பாடி அருகேயுள்ள சப்பாணிபட்டியில் அருந்ததியர் காலனி மக்கள் கொண்டாடிய பொங்கல் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

 • Share this:
  தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதற்கு போலீசாரின் அர்ப்பணிப்பு மிக்க பணியே காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

  சென்னை புனித தோமையர் மலைப்பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல்துறையினர் குடும்பங்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினார்.

  அப்போது மைதானத்திற்கு வந்த முதலைச்சரை மேள தாளங்கள் முழங்க உள்துறை செயலாளர் பிரபாகரன், டிஜிபி திரிபாதி, மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதலமைச்சர் புதுப்பானையில் பச்சரிசை இட்டு பொங்கல் வைத்தார்.

  இதனை அடுத்து விழாவில் பங்கேற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு முதலமைச்சர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.

  போலீசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிந்த விழாவில் ஆங்காங்கே குடிசைகள் அமைக்கப்பட்டு கிராமம் போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது. கயிறு இழுத்தல் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் ஆயுதப்படை போலீசார் மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதனை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த ஆதிபராசக்தி படத்தில் உள்ள பாடலுக்கு பெண் போலீசார் நடனமாடினர்.

  இதனை தொடர்ந்து பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றிநடைபோடும் தமிழகத்திற்கு அச்சாணியாக இருப்பது வீர நடை போடும் காவலர்கள் என புகழாரம் சூட்டினார்.

  இதையடுத்து, விமானம் மூலம் சேலம் சென்றடைந்த முதலமைச்சர், தனது சொந்த ஊரான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார். தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள முருகன் கோயிலில் வழிபட்டார்.

  பின்னர் அங்கு கட்டப்பட்டிருந்த மாடுகளுக்கு உணவளித்த முதலமைச்சர், பொங்கல் விழாவில் ஏற்பாடு செய்திருந்த உணவை, உறவினர்களுடன் அமர்ந்து உண்டார்.

  எடப்பாடி அருகேயுள்ள சப்பாணிபட்டியில் அருந்ததியர் காலனி மக்கள் கொண்டாடிய பொங்கல் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அவருக்கு ஆரத்தி எடுத்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்குள்ள விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில்களில் வழிபாடு நடத்தியவர், மக்களுக்கு உணவு வழங்கி அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.
  Published by:Yuvaraj V
  First published: