கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு... நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி...!

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு... நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி...!
ஆலையை பார்வையிட்ட முதலமைச்சர்
  • News18
  • Last Updated: October 2, 2019, 11:05 AM IST
  • Share this:
கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக மாற்றும் நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று திறந்துவைத்தார்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் கொடுங்கையூரில் ரூ.348 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.


தொடர்ந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீரை பெற இருக்கும் 9 தொழிற்சாலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சென்னை பெருநகர் பகுதியின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கேற்ப பாதுகாப்பான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று சேவைகளை வாரியம் சிறப்பாக செய்து வருவதாக பாராட்டினார்.

மேலும் பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கு, அ.தி.மு.க. அரசு இப்பொழுது நடவடிக்கை எடுத்து வருகிறது. இனி புதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுகின்றபோது நீரை மறுசுழற்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கு சுத்திகரிப்பு நிலையத்தினை உருவாக்கினால்தான் அனுமதியே வழங்கப்படும் என்ற ஒரு விதி விரைவில் உருவாக்கப்பட உள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நன்னீரைப் பாதுகாக்கும் பொருட்டு, கழிவுநீரை சுத்திகரித்துப் பயன்படுத்துவதற்கான இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

விழா முடிந்த பின்னர், ஆலையை முதலமைச்சர், அமைச்சர்கள் சென்று பார்வையிட்டனர். அப்போது, கழிவு நீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை அதிகாரிகள் காட்டினர். அப்போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இந்த நீரை குடிக்கலாமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், இந்த நீரை குடிப்பதால் உடல்நலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூற, அமைச்சர் நீரை குடித்துப் பார்த்தார்.

Also See...

First published: October 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading