தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு - முதல்வர் விளக்கம் - திமுக வெளிநடப்பு

தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு -  முதல்வர் விளக்கம் - திமுக வெளிநடப்பு
முதலமைச்சர் பழனிசாமி
  • Share this:
தபால்துறை போட்டித்தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் நாளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளிக்கும் பதிலை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரமில்லா நேரத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, தபால் துறை போட்டித்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அப்போது பேசிய அவர், தமிழர்கள் மத்திய அரசு பணிகள் சேரக்கூடாது என திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுவதாகவும், தமிழ் மொழியை மீண்டும் சேர்க்க மாநில அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனவும், இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரினார்.


இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தபால் துறை சார்பில் நடைபெற்ற தேர்வில் தாள் ஒன்றில் தான் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தாள் இரண்டில் எந்த பிரச்னையும் இல்லை என்றும், இரு மொழி கொள்கையை பின்பற்றும் தமிழக அரசு, இந்த விவகாரம் குறித்து நிச்சயம் மத்திய அரசை வலியுறுத்தும் என பதிலளித்தார்.

பின்னர் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், இரு மொழி கொள்கையில் ஒருமித்த கருத்து கொண்டிருக்கிறோம், அதே வேளையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுகவும் , அதிமுகவும் சேர்ந்தே குரல் எழுப்புவோம், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம் என பதிலளித்தார்.பின்னர் பேசிய துரைமுருகன், நமது எம்.பி.க்கள் நிச்சயம் குரல் எழுப்புவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் ஏன் தமிழக அரசு மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கூடாது என மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், இந்த விவகாரம் குறித்து நாளை நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப இருக்கிறார்கள். இதற்கு மத்திய அரசு கொடுக்கும் பதிலை பொறுத்து நாம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் முதலமைச்சர், திமுக இந்த விவகாரத்தில் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசி வருவதாகவும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளிக்கும் பதிலை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என பதிலளித்தார். மேலும் திமுகவை விட 100 மடங்கு தமிழ் உணர்வு எங்களுக்கு உள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

திமுக வெளிநடப்பு:

பின்னர் பேசிய துரைமுருகன், நாங்கள் உணர்வோடு இந்த விவகாரம் குறித்து பேசுகிறோம், ஆனால் திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பேசியதால் அதனை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறினார். அதனை தொடர்ந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

மீண்டும் பேசிய முதல்வர், திமுகவினர் ஏதாவது காரணத்தை தேடி பார்த்ததாகவும், எதுவும் கிடைக்காததால், இந்த விவகாரத்தை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டு வெளிநடப்பு செய்துள்ளதாக பேசினார்.

தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஐ.யு.எம்.எல் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்,

அப்போது பேசிய துணை முதலமைச்சர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமியை பார்த்து நாடாளுமன்றத்தில் இருமொழி கொள்கைகாக தமிழக எம்.பி.க்கள் வாதாடுவார்களா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ராமசாமி, தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நிச்சயம் வாதாடுவார்கள் என பதிலளித்து வெளிநடப்பு செய்தனர்.

”திமுக நோக்கம் ஒருபோதும் நடக்காது”

இறுதியாக பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அரசின் நிலைப்பாட்டை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டதே தவிர மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மாட்டோம் என எந்த இடத்திலும் சொல்லவில்லை என்றும், திமுகவின் நோக்கமே தமிழக அரசு மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற செய்வதே தவிர தமிழக உரிமையை நிலைநாட்டுவது அல்ல எனவும், ஏதாவது செய்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே சிக்கலை உருவாக்கி அதில் குளிர் காய திமுக நினைப்பதாகவும், அது ஒரு போதும் நடக்காது என விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

First published: July 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading