aதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை சேலம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கினாார். அதிமுக தொண்டர்கள் பலர் இதில் கலந்து கொண்டு முதல்வர் பழனிசாமிக்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், சேலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கினார். சேலம் மாவட்டம் பெரியசோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அப்போது முதல்வரை வரவேற்க ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டனர். பரப்புரைக்கு முன்னதாக சென்றாய பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த முதல்வருக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சேலத்தில் மேற்கொண்ட பரப்புரையின் போது பேசியல் முதல்வர் பழனிசாமி, நான் ஒரு போதும் முதல்வராவேன் என்று எனக்கு நினைக்கவில்லை. முதல்வர் பதவி எனக்கு இறைவனால் கிடைத்தது என்றார். மேலும் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழும் தமிழகம் என்றும் கூறினார்.
கடந்த சில மாதங்களாக மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர், தற்போது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
முன்னதாக, தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன், பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல்கட்டப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
திமுக உயர்மட்டக் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.