• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது ஸ்டாலினுக்காக அல்ல - எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது ஸ்டாலினுக்காக அல்ல - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன...

 • Share this:
  மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது ஸ்டாலினுக்காக அல்ல, மக்களின் நலன் கருதியே என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாகை வடக்கு தெற்கு என்று கூறுகிறார் எனவும் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சாரத்தில்  பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமியை ஆதரித்து  பிரச்சாரம் செய்தார்.

  மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சித்தமல்லி ஆ.பழனிச்சாமியை ஆதரித்து மயிலாடுதுறை சின்னகடைத் தெருவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

  அப்போது அவர் பேசுகையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரங்கள் மூலமாகவும், கிராம சபைக் கூட்டங்களை நடத்தி மனுக்களை பெறுவதன் மூலமாகவும் மக்களை ஏமாற்றி முதல்வராகி விடலாம் என கனவு காண்கிறார். ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலைப் போல் இந்த தேர்தலில் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

  பொதுமக்கள் அரசை உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் 1100 என்ற உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் சம்பந்தப்பட்ட துறையினரை தொடர்பு கொண்டு குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவித்தால் அவை உடனடியாக சரிசெய்யப்படும். இதன்மூலம் 80 ஆயிரம் பேருக்கு மேல் இதுவரை தீர்வு பெற்றுள்ளனர்.

  மேலும், உழவன் செயலி மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கண்டு விஞ்ஞான முறைப்படி அரசு செயல்படுகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400 மதிப்பீட்டில் அரசு கதவணை அமைத்துள்ளது. மயிலாடுதுறையை மாவட்டம் ஆக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அரசு மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளது.

  இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் அவர் தற்போது வரை நாகை வடக்கு மாவட்டம் என்றே கூறி வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் ஸ்டாலினுக்காக உருவாக்கப்படவில்லை. மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அம்மா கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் கடந்த ஆண்டு 6-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை நிகழாண்டு 435-ஆக உயர்ந்துள்ளது.

  11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டால் அடுத்த ஆண்டு 600 அரசுப்பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பார்கள். 2010-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சி செய்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்பதை மறந்துவிட்டு, நீட் தேர்வை தடுக்க தமிழக அரசு எதையும் செய்யவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். நீட் தேர்வை நடைமுறைப் படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால் வேறுவழியின்றி தமிழக அரசு அதனை செயல்படுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது.

  Must Read : திமுக பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி! - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

   

  மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. மயிலாடுதுறை நகரில் புதைசாக்கடை பிரச்னைக்கு நீரந்தர தீர்வு காண நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் சீர்செய்யப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மயிலாடுதுறை பாமக வேட்பாளர் பழனிச்சாமிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்” இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: