13 மாணவர்கள் மரணத்திற்கு திமுக தான் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக, திமுக காங்கிரஸ், ஐ யு எம் எல் என அனைத்துக்கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது, நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இடையே பேரவையில் காரசார விவாதம் நடந்தது.
கவன ஈர்ப்பில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய திமுக உள்ளிட்ட அனைவரும் மத்திய அரசை வற்புறுத்தி வருவதாகவும், பேரவையில் ஏக மனதாக தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியும், மத்திய அரசு நம் மசோதாக்களை மதிக்க வில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்றும், ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் வாய்ஸை மத்திய அரசு மறுத்து வருகிறது. எனவே இதனை மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், கருணாநிதி முதலமைச்சராக இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு யார் ஆட்சியில் எப்போது வந்தது ? யார் அறிமுகப்படுத்தினார்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது எனவும், 13 மாணவர்கள் மரணத்திற்கு திமுகவே காரணம் எனவும் விமர்சித்தார். ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் கொண்டு வந்து வரலாற்று பிழை செய்தது திமுக எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு விசம் என்றால் அதனை விதைத்தது திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தான். ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான் வழக்கு தொடர்ந்து நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார்.
நீட் தேர்வுக்கு விலக்கு வராது என்ற தீர்ப்புக்கு துணை நின்றவர் நளினி சிதம்பரம். மேலும், எட்டு மாதத்தில் நீட் தேர்வு இருக்காது என ஸ்டாலின் சொன்னார். அதை எப்படி என்பதை சொல்ல வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு பிரச்னை வந்த போது டெல்லிக்கு சென்று வலியுறுத்தி சட்டமுன்வடிவை உருவாக்கி சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி நடவடிக்கை எடுத்தோம். அந்த வகையில் தான் நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசை வற்புறுத்தி தீர்வு பெறுவோம் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வை அனைத்து மாநிலமும் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் கடைசி விளிம்பு வரை போராடும் மாநிலம் தமிழகம் மட்டும் தான். ஜல்லிக்கட்டு போல இதில் விலக்கு பெற வழி இல்லை. ஊசி அளவில் இடம் கிடைத்தாலும் அதில் நுழைந்து நீட்டுக்கு விலக்கு பெறுவோம் என்று பதிலளித்தார்.