திமுக எம்.பியும் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து, அ.தி.மு.க சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது ஆபாசமாக திட்டுதல், தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.குப்பனுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி தனது தாயார் குறித்து பேசும் போது தழுதழுத்த குரலில் பேசினார்.
அவர் பேசியதாவது, “என் தாயைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேசியிருக்கிறார். குடும்பத்தில் ஒரு தாயாக பார்க்க வேண்டும். முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தாய்மார்கள் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். எனக்காக பரிந்து பேசவில்லை. ஒவ்வொருவரும் தாய்க்கு பிறந்தவர்கள்
தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவது, இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு தக்க தண்டனைய வழங்க வேண்டும். என்னுடைய தாய் கிராமத்தில் பிறந்தவர், விவசாயி, இரவு பகல் பாராமல் பாடுபடுபவர், அவர் இறந்துவிட்டார் அவரை பற்றி இழிவாக தரக்குறைவாக எப்படி எல்லாம் பேசினார். முதலமைச்சருக்கே இந்த நிலைமை. நான் நினைத்தால் சாதிக்க முடியும். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்த வளர்ந்தவன். ஏழையாக இருந்தாலும் பணக்கார்ராக இருந்தாலும் தாய்தான் உயர்ந்த ஸ்தானம்.
ஒரு சாமானியன் முதல்வராக வந்தால் எவ்வளவு பேச்சுக்களை வாங்க வேண்டியிருக்கிறது. என்னையே இப்படி பேசும் இவர்கள் நாளை தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் நிலைமை, தாய்மார்கள் நிலைமை என்னவாகும். இங்கு இதைப்பேச வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. தாய்மார்கள் இருந்ததால் பேசிவிட்டேன். யார் பெண் குலத்தை இழிவாக பேசினாலும், தாயை இழிவாக பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை தருவார்.
நான் முதல்வராக இருந்து பேசவில்லை உங்கள் குடும்பத்தில் ஒருவறாக இருந்து பேசுகிறேன். இந்த அரசு மக்களின் பாதுகாப்புக்காக முழுவதுமாக செயல்பட்டு வருகிறது. சாலை வசதி, மருத்துவ வசதி, காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது, குடிதண்ணீர் சரியாக வருகிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக இருக்கிறது. எனவே அதிமுகவின் கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.