• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விபத்தில் அதிமுக எம்.பி. உயிரிழப்பு: முதலமைச்சர் இரங்கல்

விபத்தில் அதிமுக எம்.பி. உயிரிழப்பு: முதலமைச்சர் இரங்கல்

விபத்திற்குள்ளான எம்.பி.ராஜேந்திரன் வாகனம்

விபத்திற்குள்ளான எம்.பி.ராஜேந்திரன் வாகனம்

எம்.பி. ராஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் செல்கிறார்

  • News18
  • Last Updated :
  • Share this:
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், திண்டிவனத்தில் நிகழ்ந்த சாலைவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

விழுப்புரம் மாவட்டம் ஆதனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.  அதிமுகவின் விவசாயப் பிரிவு செயலாளரான இவர், கடந்த மக்களவை தேர்தலில் விழுப்புரம் தனித் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

இந்தநிலையில், விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில், நேற்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் இவரும் கலந்துகொண்டார்

இதனையடுத்து, திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டையில் உள்ள அரசு விடுதியில் இரவு தங்கிய அவர், இன்று அதிகாலை ஐந்து மணியளவில் சென்னை புறப்பட்டிருக்கிறார். அப்போது திண்டிவனம் அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, சாலையின் நடுவே புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது.



இதில் காரில் பயணித்த எம்.பி. ராஜேந்திரன், அவரது உதவியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் கார் ஓட்டுனர் அஜித் ஆகிய மூவர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எம்.பி.ராஜேந்திரன், சிகிச்சை பலனளிக்காமல் அங்கு உயிரிழந்தார்.  மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலையின் நடுவே தடுப்புச்சுவர் பணிகள் நடைபெறுவதற்கான எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்காததே, விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த எம்.பி. ராஜேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளது.  சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டுள்ளனர்.

அவருக்கு சாந்தா என்ற மனைவியும், திவ்யா, தீபிகா என்ற இரு மகள்கள் மற்றும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.

கார் பழுதானதால், கடந்த ஒருவாரமாக மகனின் காரை எம்.பி.ராஜேந்திரன் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

இந்தநிலையில்,  எம்.பி. ராஜேந்திரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விழுப்புரம் செல்கிறார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: