• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆர்டிஐ கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காத முதலமைச்சர் தனிப்பிரிவு.. சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

ஆர்டிஐ கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காத முதலமைச்சர் தனிப்பிரிவு.. சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

தலைமை செயலகம்

தலைமை செயலகம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை என்றும், வெளிப்படை தன்மையுடன் இயங்குவதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

  • Share this:
    சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் காசிமாயன் முதலமைச்சர் தனி பிரிவிற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நேரில் சென்று ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை வரப்பெற்ற மனுக்களின் மொத்த எண்ணிக்கை, தீர்வு காணப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை தொடர்பான ஆவணங்களை பார்வையிட அனுமதி கேட்டிருந்தார்.

    ஆனால், முதலமைச்சரின் தனி பிரிவு இதற்கு அனுமதி மறுத்ததுடன், வரப்பெற்ற மனுக்கள் மற்றும் தீர்வு காணப்பட்ட மனுக்களின் விவரங்களை மட்டுமே பதிலாக கொடுத்துள்ளது. நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவைகளின் விவரங்களை தரவில்லை என்று காசிமாயன் குற்றம்சாட்டியுள்ளார்.

    அதேபோல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் உள்ள நபர்களின் விவரம், அவர்கள் செய்யும் பணி, செயல்பாடுகள் உள்ளிட்டவை பற்றிய தகவல்களை கோரும்போது, முதல்வர் தனி பிரிவு என்பது பொது அதிகார அமைப்பு அல்ல என்றும், பொதுத்துறை என்ற பொது அதிகார அமைப்பில் ஒரு பிரிவு மட்டுமே என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக இணையதள முகவரியை வழங்கி அதில் இருந்து தகவல்களை பதிவிறக்கம் செய்யும்படி கூறியுள்ளனர்.

    தகவல் அறியும் சட்ட பிரிவு 25-இன் கீழ், ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும், தங்களது ஆண்டறிக்கையை தானாகவே முன்வந்து தங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். ஆனால், ஒரு முதலமைச்சர் தனி பிரிவே அதை செய்யாமல் வெளிப்படை தன்மையில்லாமல் இருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவை தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்களிடம் போதிய பணியாளர்கள் இல்லாததால், சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்படும் மேல் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: