ரூ.3 லட்சம் கோடி: 10 ஆண்டு காலத் திட்டம்: தமிழ்நாட்டுக்கான காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவு

தமிழ்நாட்டிற்கான காலநிலை மாற்றம் குறித்த செயல் திட்டத்தின் வரைவு அறிக்கையை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை பொதுமக்கள் கருத்திற்?

ரூ.3 லட்சம் கோடி: 10 ஆண்டு காலத் திட்டம்: தமிழ்நாட்டுக்கான காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவு
காலநிலை மாற்றம்
  • Share this:
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகும் மற்றும் மேம்படுத்த வேண்டிய 1.நீடித்த வேளாண்மை, 2.நீர் ஆதாரம், 3.கடற்கரை பகுதி மேலாண்மை, 4.வனம் மற்றும் உயிர்ப்பன்மயம், 5.நீடித்த உறைவிடம், 6.எரிசக்தி திறன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சூரிய சக்தி, 7. அறிவாற்றல் மேலாண்மை என்கிற ஏழு பிரிவுகளை அடையாளம் கண்டு அதனை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு இந்த செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக 2017ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு முழுவதும் 260 திட்டங்கள் 4,04,258.14 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஆண்டு மத்திய அரசு தமிழ் நாட்டிற்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தை திருத்தி அமைக்குமாறு கோரியிருந்தது. அதன்படி GIZ நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தமிழ்நாட்டிற்கான காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு (2021 முதல் 2030 ஆம் ஆண்டு) ஏறத்தாழ அனைத்து துறைகளிலிருந்தும் பரிந்துரைகள் ஆலோசனைகள், நோக்கம் மற்றும் விவரங்கள் பெறப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு செயல் திட்ட அறிக்கையில் அடுத்த பத்தாண்டுகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்துவதற்கான 199 திட்டங்களை 3,24,211.20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


நீடித்த வேளாண்மை

தமிழ்நாட்டின் வேளாண்மை துறையானது அண்மைக்காலங்களில் அடிக்கடி நிகழும் வறட்சி, வெள்ளம், புயல் ஆகியவற்றின் தாக்கத்தால் பாதிப்படைகிறது. வேளாண் பரப்பு குறைவது மண்வளம் குறைவது போன்றவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளது. இப்பிரச்சினைகளை சரி செய்யும் நோக்கில் அடுத்த பத்தாண்டுகளில் ரூபாய் 71,731.94 செலவில் 51 திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நீர் ஆதாரம்அண்மையில் வெளியான பல்வேறு ஆய்வுகளும் தமிழ்நாட்டில் மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் வறட்சி வெள்ளம் ஆகியவற்றால் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாதிப்படைந்து வருவதாகவும் தெரிவிக்கிறது.  இதனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ரூபாய் 19.041.84 கோடியில் 10 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

வனம் மற்றும் உயிர்ப்பன்மயம்

நகர விரிவாக்கம், வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றால் வனப்பரப்பு குறைந்து வருகின்ற நிலையில் காலநிலை மாற்றமும் வனப்பரப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதனை சரி செய்யும் நோக்கில் அடுத்த பத்தாண்டுகளில் ரூபாய் 2,834.44 கோடியில் 37 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது..

கடற்கரை பகுதி மேலாண்மை

மக்கள் தொகை பெருக்கம், கடல் வளங்களை அதிகம் சார்ந்திருப்பது, கடல் வளங்களை அதிகம் சுரண்டுவது, வளர்ச்சித் திட்டங்கள், அதிகளவிலான மாசுபாடு மற்றும் புயல், சுனாமி, கடல் நீர் உட்புகுதல் போன்றவற்றால் தமிழகக் கடற்கரைப் பகுதி பாதிப்படைந்து வருகிறது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூபாய் 4,776.10 கோடியில் 38 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

அறிவாற்றல் மேலாண்மை

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு அல்லது தடுப்பதற்கு காலநிலை மாற்றம் குறித்த தரவுகளை அதிகளவில் சேகரிப்பதும், அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதலும் அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு  ரூபாய் 280.87 கோடி செலவில் 12 திட்டங்கள் செயல்படுத்தப்படும்

எரிசக்தி திறன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சூரிய சக்தி

இந்தியாவில் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடம் வகிக்கிறது. மின் தேவையை காற்றாலைகள், சூரிய ஒளி ,உயிர்வளி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் மூலம் பெரும் நோக்கில் 27 வகையான திட்டங்களை ரூபாய் 98,056.68 கோடியில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நீடித்த உறைவிடம்

குடியிருப்பு திட்டங்கள், குடிநீர், சுகாதாரம், கழிவுநீர் வசதி, கழிவு மேலாண்மை, போக்குவரத்து, ஆற்றல், மாசுபாடு, பசுமை திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் நீடித்த உறைவிடம் ஆகும். இவற்றை மேம்படுத்தும் நோக்கில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூபாய் 1,27,489.33 கோடியில் 24 திட்டங்களை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயல் திட்டங்களின் விரிவான விளக்கங்கள் அடங்கிய வரைவு அறிக்கை Tamil Nadu State Action Plan on Climate Change 2.0 தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. (https://www.environment.tn.gov.in/tnsapcc-draft ).

இந்த வரைவு அறிக்கையின் மீது பொதுமக்கள் அனைவரும் தங்கள் கருத்துகள்/ஆலோசனைகளை அடுத்த 30 நாட்களுக்குள் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, எண் 1, தரைத்தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை 600015 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கலாம்.

Also see:

First published: February 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்