சினிமா பாணியில் போலீஸ் உடையில் கொள்ளை... பதினைந்தே மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடித்த போலீஸ்..

Youtube Video

கன்னியாகுமரி மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் உடையணிந்து வந்த மர்ம நபர்கள், கேரள நகை வியாபாரியின் காரை மறித்து 80 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்து தப்பியுள்ளனர். பதினைந்தே மணிநேரத்தில் குற்றவாளிகளைப் போலீசார் பிடித்தது எப்படி?

 • Share this:
  கேரள மாநிலம் நெய்யாற்றின கரையைச் சேர்ந்தவர் சம்பத்; இவர் அங்கு பிரபல நகைக் கடை நடத்தி வருகின்றார். கேரளா மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள நகை கடைகளுக்கு மொத்தமாக நகை விற்பனையும் செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை காலை நாகர்கோவிலில் உள்ள சில கடைகளுக்கு நகையை விற்றுள்ளார். அந்தப் பணம் 76 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயுடன் கேரளாவிற்கு சொகுசு காரில் புறப்பட்டார்.

  தக்கலை அருகே கார விளை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றபோது மற்றொரு சொகுசு காரில் போலீஸ் உடையணிந்த 4 பேர் பின்தொடர்ந்து வந்து வழி மறித்துள்ளனர். பின்னர் காரை சோதனையிட வேண்டும் என்று கூறி, சம்பத் வைத்திருந்த 76 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயையும் பறித்து தங்கள் காரில் ஏறித் தப்பிச் சென்றனர்.

  சம்பத் தக்கலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சம்பவம் நடந்த இடம் மற்றும் அதன் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, காரின் பதிவெண்ணின் அடிப்படையில் போலீசார் தேடிய போது, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கார் ஓட்டிச் சென்ற கோபக்குமார், சுரேஷ்குமார், கண்ணன், ராஜேஷ் குமார் மற்றும் மனு என்ற சஜின்குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 76 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயையும் கார், போலீஸ் உடை ஆகியவற்ளையும் பறிமுதல் செய்தனர்.

  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மனு என்ற சஜின்குமார், சம்பத்தின் கடையில் வேலை செய்து வருவது தெரியவந்தது. அவர் சம்பத்திடம் இருந்து பணம் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு தெரியவந்தது.

  மேலும் படிக்க... பல தலைமுறைகளாக குடியிருந்த தமிழ் குடும்பங்கள்: வெளியேறுமாறு கேரள அரசு நோட்டீஸ்..

  நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 80 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட பதினைந்தே மணிநேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு பணமும் மீட்கப்பட்டுள்ள சம்பவத்தில், தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டியுள்ளார்.

  வீடியோ:

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: