ராமநாதபுரம் மோசடி வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.. நடந்தது என்ன?

பைனான்ஸியர் நீதிமணி சிக்கிய வழக்கில், தற்போது தமிழ் திரையுலகின் திரைப்பட தயாரிப்பாளர், பட வினியோகஸ்தர்கள் மூவரை குற்றவாளிகளாக ராமநாதபுரம் மாவட்ட போலீசார் சேர்த்துள்ளனர். நடவடிக்கை பாயுமா?

ராமநாதபுரம் மோசடி வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.. நடந்தது என்ன?
நீதிமணி
  • Share this:
சேலத்தைச் சேர்ந்த நீதிமணி புல்லியன் பைன் டெக் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி, கொள்ளை லாபம் தருவதாக கூட்டணி அமைத்துள்ளார்.

ஒரு லட்சத்திற்கு மாதம் 5,000 ரூபாய் லாபத் தொகை, ஆள் சேர்த்துவிட்டால், மாதம் 2,000 ரூபாய் என மாயவலையை விரித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் மூலம் முதலில் சேலத்தில் வசூல் வேட்டையைத் தொடங்கிய நீதிமணி, பின்னர் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வரை வசூலித்த நீதிமணிக்கு வெளிநாட்டில் முதலீடு செய்ய ஆசை பிறந்துள்ளது. குட்கா தயாரிப்பு நிறுவனம், பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனம் என பல பெயர்களில் நீதிமணி சிங்கப்பூரில் தொழில் தொடங்கியுள்ளார்.


சினிமாத் துறையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும், கருப்பை வெள்ளையாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் திட்டமிட்டார் நீதிமணி. நீதிமணி கொடுத்த வாக்குமூலம் நியூஸ்18 தமிழ்நாடு வசம் கிடைத்துள்ளது. அதில், சினிமாவில் நீதிமணி செய்த முதலீடுகளும், யார் மூலம் முதலீடு செய்தார் என்பதும் அம்பலமாகியுள்ளது.

சேலத்தில் திரைப்படங்களை வினியோகிக்கும் 7ஜி சிவா என்பவரிடம் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக நீதிமணி வாக்குமூலம் கொடுத்துள்ளார். காப்பான் திரைப்பட விநியோகஸ்தர் முருகானந்தம் என்பவரிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வைத்திருப்பதாகவும் நீதிமணி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மகாமுனி திரைப்பட விநியோகம் மற்றும் செலவுத் தொகை என ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் ஞானவேல் ராஜாவிடம் 4 கோடியே 60 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் நீதிமணி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.தொழில் மூலம் கிடைத்த 145 கோடி ரூபாயில், ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு 50 கோடி ரூபாய் வரை தரவேண்டியுள்ளது என்றும் அவரது வாக்குமூலத்தில் சொல்லப்பட்டுள்ளது.

விசாரணையில், நீதிமணி சொன்னது உண்மை என போலீசார் கருதுவதால், 7ஜி சிவா, முருகானந்தம், ஞானவேல் ராஜா ஆகியோரை இந்த வழக்கில் குற்றவாளிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். மேலும் விசாரணையில், மதுரையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து பங்களா கட்டியுள்ளது தெரியவந்தது. அத்துடன் ஈசிஆர் சாலையில், கோடிக்கணக்கில் முதலீடு செய்து, மாங்குரோவ் ரிசார்ட்டை நீதிமணி வாங்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கோவை, சேலம், நெல்லை என தமிழகம் முழுவதும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. நீதிமணியும் அவரது கூட்டாளிகளும் குடும்பத்தினர் பெயரில் வாங்கிப் போட்டுள்ள சொத்துக்களின் ஆவணங்களை தனிப்படை போலீசார் சேகரித்துள்ளனர்.

வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க நீதிமணியின் பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கையில் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு அனுப்பவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க...

மாஸ்க் இல்லாவிட்டால் பொருட்கள் வாங்கமுடியாது: சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள் என்னென்ன? முழுதும் படியுங்கள்.

நீதிமணி மற்றும் ஆனந்த் ஆகியோரிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் 94899 19722 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட போலீசார் அறிவித்துள்ளனர்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading