தமிழக ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருள்களை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனம் 2 ஆயிரத்து 56 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத வழக்கில், வருமான வரித்துறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அது தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் பெற்றுள்ளது.
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை, சத்துமாவு ஆகியவற்றையும் ரேஷன் கடைகளுக்கான பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்களையும் கிறிஸ்டி நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண் இயக்குநர் சுதாதேவி இல்லத்திலும் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
70 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 17 கோடி ரொக்கமும், இரண்டரை கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.
சோதனையின்போது, ஆயிரத்து 350 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வருமானவரித்துறை தெரிவித்தது.
இந்நிலையில், தனது வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளை சட்டவிரோதமானவை என அறிவிக்க வேண்டும் எனவும், சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களைத் தனக்கு எதிராகப் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்றும் கிறிஸ்டி நிறுவன அதிபர் குமாரசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் ஏற்கனவே நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற உத்தரவின்படி தங்கள் நிறுவனம் சார்பில் இந்தியன் வங்கிக் கிளையில் டெபாசிட் செய்த பிணைத் தொகை 213 கோடி ரூபாயில் 50 கோடி ரூபாயை டெபாசிட்டாக வைத்துக்கொண்டு மீதித் தொகையைத் திருப்பி வழங்க வேண்டும் என கிறிஸ்டி நிறுவனம் முறையிட்டது.
அவ்வாறு வழங்கினால் மட்டுமே ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க முடியும் என்றும் வாதிட்டது.
மேலும், தங்கள் நிறுவனம் மீது புதிதாக வழக்குகள் பதிவு செய்ய மாட்டோம் என வருமான வரித்துறை உறுதி அளித்தால், வருமான வரித்துறை மீது தங்கள் நிறுவனம் சார்பில் தொடர்ந்த வழக்குகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கிறிஸ்டி நிறுவனம் சார்பில் கோரப்பட்டிருந்தது.
அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கிறிஸ்டி நிறுவனம் 2 ஆயிரத்து 56 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக வருமான வரிக்கணக்கு மதிப்பீடு செய்து இறுதி முடிவெடுக்கும் வரை சொத்துகளை முடக்கி வைக்க வருமான வரித்துறைக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக தாங்கள் தொடுத்திருந்த ஏழு வழக்குகளை கிறிஸ்டி நிறுவனம் வாபஸ் பெற்றது. இதனால் அக்குழுமத்திற்கு எதிரான வழக்கு விசாரணை மீண்டும் தடையின்றி தொடர்வதுடன், இந்த ஆண்டு முடியும் முன்பு இறுதி வரி ஏய்ப்பு அறிக்கையை வருமான வரித்துறை தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.