• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உடுமலைப்பேட்டை அருகே முகாமிட்டுள்ள 'சின்னதம்பி'

உடுமலைப்பேட்டை அருகே முகாமிட்டுள்ள 'சின்னதம்பி'

சின்னத்தம்பி

சின்னத்தம்பி

சின்னதம்பி யானையைப் பிடித்து கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வாழ்விடத்தை தேடி 3 நாட்களில் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்துள்ள சின்னதம்பி யானை உடுமலைப்பேட்டை அருகே முகாமிட்டுள்ளது. யானையை காட்டுக்குள் விரட்ட முடியாததால் டாப்சிலிப்பில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

கோவை பெரிய தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பி யானை கடந்த 25-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது. 2 நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்த சின்னதம்பியை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சி நடைபெற்றது. கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பியின் உடலில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் உதவியுடன் யானை இருப்பிடத்தை வனத்துறையினர் பின் தொடர்ந்து வந்தனர்.

நள்ளிரவுக்குப் பின்னர் மலையில் இருந்து இறங்கி விவசாயப் பயிர்கள் அதிகம் உள்ள உடுமலை நாலாமூளை சுங்கம் பகுதிக்கு மெதுவாக நடந்து பின்னர் இன்று காலை மைவாடி ரயில் நிலையம் அருகே ஊருக்குள் புகுந்தது. இதை அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டதால், மிரண்டு போன சின்னதம்பி புதருக்குப் பின் மறைந்து அங்கேயே முகாமிட்டது.

வாழிடத்தை தேடி 3 நாட்களில் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்ததால் உடல் சோர்வாலும், கடுமையான வெயில் காரணமாகவும் சின்னதம்பி அங்குள்ள தண்ணீர் குட்டையில் இதமாக சற்று நேரம் உறங்கியது. இதை நோட்டமிட்ட வனத்துறையினர் அங்கு சென்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முற்பட்டனர். வனத்துறையினர் வந்ததை பார்த்து எழுந்து நடக்க ஆரம்பித்த சின்னதம்பி மீண்டும் வாழிடத்தை நோக்கி புறப்பட்டது. இந்த யானையை காட்டுக்குள் விரட்ட முடியாத காரணத்தால் டாப்சிலிப்பில் இருந்து சலீம், மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சின்னதம்பி யானையைப் பிடித்து கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் முடிவு மிகவும் மோசமானது என எதிர்ப்பு தெரிவித்துள்ள வன உயிரின ஆர்வலர்கள், ஏதோ ஒரு கட்டுமானத்தை வனத்துறை அனுமதித்த காரணத்தால் தான் யானை தன் வழியை மாற்றுகிறது என குறிப்பிட்டனர்.

ஆண் யானையை கும்கியாக மாற்றுவது யானைகளின் இனப்பெருக்கத்தை குறைக்கும் என எச்சரித்துள்ள வன உயிரின ஆர்வலர்கள், இம்மாதிரி நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் #savechinathambi என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:DS Gopinath
First published: