சென்னை வந்த சீன அதிபரின் கார்... காரின் சிறப்பம்சங்கள்

சென்னை வந்த சீன அதிபரின் கார்... காரின் சிறப்பம்சங்கள்
  • News18
  • Last Updated: October 10, 2019, 11:15 AM IST
  • Share this:
சீன அதிபர் ஷி ஜிங்பிங் மாமல்லபுரம் செல்வதற்காக, அவரின் பிரத்யேக கார்கள் கார்கோ விமானம் மூலம் சென்னை வந்ததுள்ளன.

சீன அதிபர் ஷி ஜிங்பிங் பயணம் செய்வதற்காக தனி விமானம் மூலம் 4 கார்கள் சீனாவில் இருந்து சென்னை வந்து இறங்கியுள்ளன. இந்த ஒவ்வொரு காரின் குறைந்தபட்ச விலையும் ஏறக்குறைய, 6 கோடி ரூபாய். சீனாவின் பழம்பெரும் கார் தயாரிப்பு நிறுவனமான HONGQI தான் இன்றளவும் சீன அதிபர்களுக்கான கார்களை தயாரிக்கிறது. HONGQI என்றால் சிவப்பு கொடி என்று பொருள்.

பெரும்பாலும் சீன அதிபர் ஷி ஜிங்பிங் பயன்படுத்தும் கார் Hongqi L5 என்ற மாடல். ஆப்ரிக்க பயணத்தின் போது Hongqi N501 என்ற மாடல் காரையும் அவர் பயன்படுத்தி இருக்கிறார். Hongqi நிறுவனம் அரசாங்க பயன்பாடு, அணிவகுப்பு பயன்பாடு மற்றும் சாமானிய மக்களுக்கான கார் என்று 3 வகைகளில் கார்களை தயாரித்து வருகிறது. பார்ப்பதற்கு பழங்காலத்து கார் போல் காட்சியளித்தாலும் இந்திய குடியரசு தலைவர் பயன்படுத்தும் Mercedes-Maybach S600 PULLMAN GUARDஐ விட வலிமையான, அளவு மற்றும் எடையிலும் பெரிய காராக இது உள்ளது.


இந்திய குடியரசு தலைவர் பயன்படுத்தும் Mercedes-Maybach S600 PULLMAN GUARD காரை விட, சீன அதிபரின் கார் ஒன்றேகால் அடி நீளம் அதிகம். உயரத்தில், இந்திய குடியரசு தலைவரின் கார் 5.24 அடி என்ற நிலையில், சீன அதிபரின் கார் 5 அடி உயரம் கொண்டது. எடையை பொறுத்தவரை Mercedes-Maybach S600 PULLMAN GUARD 2 ஆயிரத்து 390 கிலோ, சீன அதிபரின் Hongqi L5 3 ஆயிரத்து 150 கிலோ எடை கொண்டது. 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட இந்திய குடியரசு தலைவரின் கார் 9 நொடிகள் எடுத்து கொள்ளும் நிலையில் சீன அதிபரின் கார் 8 நொடிகள் மட்டுமே எடுத்து கொள்ளும். இந்த வகை கார்களில் எரிபொருள் கொள்ளளவு மிக முக்கியம். Mercedes-Maybach S600 PULLMAN GUARD 80 லிட்டரும், Hongqi L5, 105 லிட்டர் எரி பொருள் கொள்ளளவையும் கொண்டுள்ளது. இந்த வகை கார்கள் அதிகபட்சமாக, லிட்டருக்கு 2 கிலோமீட்டர் செல்லும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய குடியரசு தலைவரின் கார் ஜெர்மனில் தயாரிக்கப்பட்டு, முழு காராக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சீன அதிபரின் கார் ரகசியங்கள் காக்கப்படுவதற்காக, முழுவதும் சீன நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

ஷி ஜிங்பிங் பயன்படுத்தும் Hongqi L5 கார் தான் சீனாவின் விலை உயர்ந்த கார். Bentley Mulsanne, Rolls-Royce Ghost கார்களுக்கு இணையானது. இவைபோக அதிபர்களின் பாதுகாப்பு கருதி, குண்டு துளைக்காத கண்ணாடிகள் தொடங்கி, மிக கனமான கட்டமைப்பு என பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு கருதி, இந்த காரின் சிறப்புகளில் பெரும்பாலானவை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. கார் என்ஜின், திறன் போன்ற சில விஷயங்கள் மட்டுமே வெளி உலகிற்கு தெரியும்.

Also watch
First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading