குழி தோண்டும் பணியில் ஏன் தாமதம்... மீட்புக்குழு சந்திக்கும் பிரச்னை என்ன...?

குழி தோண்டும் பணியில் ஏன் தாமதம்... மீட்புக்குழு சந்திக்கும் பிரச்னை என்ன...?
மீட்புபணி நடக்கும் இடம்
  • News18
  • Last Updated: October 28, 2019, 1:27 PM IST
  • Share this:
குழந்தை சுர்ஜித்தை மீட்க குழி தோண்டும் பணி நேற்று காலை தொடங்கிய நிலையில், பாறைகள் காரணமாக தற்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது.

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி என்ற இடத்தில் கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு ஒன்றில், 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான். 29 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்த நிலையில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.

மாநில மீட்பு படையினர் மற்றும் தனியார் மீட்பு குழுவினர் முயன்று சிறுவனை மீட்க முடியாததால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பல்வேறு வழிகளில் முயன்று பார்த்தனர். ஆனால், சிறுவனை மீட்பதில் பின்னடைவே ஏற்பட்டது.


சிறுவன் தற்போது 100 அடிக்கும் கீழே இருக்கிறான். மேலும், கீழே சென்று விடாமல் தடுக்க அவன் வாக்யூம் முறையில் பிடித்து வைக்கப்பட்டுள்ளான். இதற்கிடையே, ஆழ்துளை கிணறு அருகே புதிதாக குழி தோண்டும் பணி நடக்கிறது. தீயணைப்பு வீரர்களை உள்ளே இறக்கி குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3 பேர் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.

நேற்று அதிகாலை ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, காலை 7 மணிக்கு குழி தோண்டும் பணிகள் தொடங்கின. ஆனால், கடும் பாறைகள் காரணமாக ரிக் இயந்திரம் சுணங்கியது. அதே நேரத்தில், மூன்று மடங்கு வேகமாக குழி தோண்டும் என்று கூறப்பட்ட மற்றொரு ரிக் இயந்திரம் ராமநாதபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது.

எல் & டி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த இயந்திரம் நேற்று மாலை வந்து சேர்ந்த நிலையில், பாகங்கள் பொருத்தப்பட்டு நள்ளிரவில் குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இடையிடையே மழை பெய்ததால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

Loading...

இரண்டாவது இயந்திரத்தின் துளையிடும் பிளேடு, கடும் பாறைகள் காரணமாக உடைந்த நிலையில் புதிய பிளேடு பொருத்தப்பட்டது. 56 மணி நேரங்கள் ஆன நிலையில் குழி தோண்டும் பணியில் முன்னேற்றம் இல்லை. மீண்டும் இன்று பகலில் பிளேடு உடைந்ததால் ரிக் இயந்திரம் மூலம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

1200 குதிரைத்திறன் கொண்ட போர்வெல் இயந்திரம் மூலம் தற்போது பாறைகள் உடைக்கப்பட உள்ளன. இந்த போர்வெல் இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் 100 அடிவரை தோண்ட முடியும். ஆனால், அகலம் குறைந்த குழிகள் தோண்டும் என்பதால், வீரர்கள் உள்ளே இறங்க முடியாது. இதனால், பாறைகள் உடைக்கப்பட்ட பின்னர், மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்படும்.

90 அடிவரை தோண்டிய பின்னர், மண் சரிவு ஏற்படக்கூடாது என்பதற்காக இரும்பு குழாய்கள் இறக்கப்படும். பின்னர், என்.எல்.சி சுரங்க ஊழியரை உள்ளே இறங்கி, குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றை அடைய பக்கவாட்டில் சுரங்கம் தோண்டப்படும். பின்னர், தீயணைப்புப்படை வீரர் உள்ளே இறங்கி, பக்கவாட்டில் தோண்டப்படும் சுரங்கம் வழியாக குழந்தை இருக்கும் ஆள்துளை கிணற்றை அடைந்து, சிறுவனை மீட்டு கொண்டு வருவார்.

தற்போது போர்வெல் இயந்திரம் மூலம் பாறையை உடைக்க 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்படும். அதன் பின்னரே, பக்கவாட்டு சுரங்கம் தோண்டப்பட்டு, வீரர் உள்ளே இறங்கி குழந்தையை மீட்பார்.

Also See...

First published: October 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...