• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குழந்தை பாதுகாப்பு உதவி எண்கள் அனைத்து வகுப்பறையிலும் ஒட்டப்படும் : அமைச்சர் தகவல்

குழந்தை பாதுகாப்பு உதவி எண்கள் அனைத்து வகுப்பறையிலும் ஒட்டப்படும் : அமைச்சர் தகவல்

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நல் நூலகர்களுக்கான அரங்கநாதன் விருது வழங்கும் விழா மற்றும் "உங்கள் நூலகம் உங்கள் கையில்"என்ற செயலி ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார்.

  • Share this:
    1098 மற்றும் 14417 ஆகிய குழந்தை பாதுகாப்பு எண்கள் இனி அனைத்து வகுப்பு அறைகளிலும் ஒட்டப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    பாலியல் தொல்லை காரணமாக கோவை தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்த நிலையில், குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தங்களுக்கு நேரும்போது அதை முறையாக புகார் அளிப்பதற்கு மாணவிகள் தயங்குகின்றனர். இதனை, குற்றவாளிகள் சாதகமாக பயன்படுத்தி தொடர்ந்து தொல்லைகள் அளிப்பதை பல வழக்குகளில் பார்க்க முடிகிறது.

    அந்த வகையில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை பாதுகாத்து, நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் உதவி எண்கள் அவசியமாகியுள்ளன. ஏற்கனவே இந்த உதவி எண்கள் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் அவை, அனைத்து வகுப்புகளிலும் ஒட்டப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நல் நூலகர்களுக்கான அரங்கநாதன் விருது வழங்கும் விழா மற்றும் "உங்கள் நூலகம் உங்கள் கையில்"என்ற செயலி ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது-

    தற்போதைய சூழலில் சுழற்சிமுறை வகுப்புகளை ரத்து செய்துவிட்டு அனைத்து மாணவர்களையும் நேரடியாக வாரத்தில் 6 தினங்களும் வகுப்புகளுக்கு வரவேற்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை.

    தனியார் பள்ளிகள் கொரோனா காலத்தில் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்க வேண்டாம். கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தவிர்த்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் தங்களின் சமூகப் பொறுப்பாக உணர்ந்து தனியார் பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

    கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடத்திலும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் இடத்திலும் பெற்றோர்கள் நேரடியாக புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 1098 மற்றும் 14417 ஆகிய குழந்தை பாதுகாப்பு எண்கள் இனி அனைத்து வகுப்பு அறைகளிலும் ஒட்டப்படும்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: