“காமவேட்கையுடன் குழந்தைகளை அணுகும் எந்த செயலும் பாலியல் வன்கொடுமை தான்“ - உயர்நீதிமன்றம்

பாலியல் தொல்லை என்பது குழந்தை முன் தன்னை தவறாக வெளிக்காட்டுவது, ஆபாச தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது அத்துமீறிய தொலைத்தொடர்புகளும் அடங்கியது தான் என தெளிவுபடுத்தியுள்ளார்

“காமவேட்கையுடன் குழந்தைகளை அணுகும் எந்த செயலும் பாலியல் வன்கொடுமை தான்“  - உயர்நீதிமன்றம்
மாதிரிப்படம்
  • Share this:
காமவேட்கையுடன் குழந்தைகளை அணுகும் எந்த செயலும் பாலியல் வன்கொடுமை தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிப்படுத்தி உள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் சிறப்பு நீதிமன்றம், பிரகாஷுக்கு இந்திய தண்டனை சட்ட பிரிவில் 10 ஆண்டு சிறையுடன் 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.


இதை எதிர்த்து பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் சொன்னபிறகு, அவரது எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என ஆராய்ந்த பின்னர் காவல்துறையை பெற்றோர் நாடிய கால தாமதம் தவறு என்ற பிரகாஷ் கூறும் காரணத்தை ஏற்க முடியாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். முன்விரோதம் காரணமாகவோ, பணம்பெறும் நோக்கத்திற்காகவோ தன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்

பாலியல் தொல்லை என்பது உடல் ரீதியாக ஏற்படுத்துவது மட்டுமல்ல எனவும், குழந்தை முன் தன்னை தவறாக வெளிக்காட்டுவது, ஆபாச தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது அத்துமீறிய தொலைத்தொடர்புகளும் அடங்கியது தான் என தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவில் சமீபத்தில் பல தம்பதியர் குழந்தை பேறின்மையை எதிர்கொண்டும், குழந்தைக்காக ஏங்கித் தவித்தும் வரும் சூழ்நிலையில், பெண் குழந்தைகள் பாலியல் ரீதியில் தாக்கப்படுவது செடியில் இருந்து மொட்டை பறிப்பதற்கு சமம் என வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த மனுதாரர் பிரகாஷ் போன்ற நபர்களுக்கு விதிக்கப்படுகின்ற தண்டனையை ரத்து செய்வதும், குறைப்பதும் பெண் குழந்தைகளுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் கூறிய நீதிபதி, பிரகாஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.Also Watch : மகனின் காதல் விவகாரத்தில் மிரட்டல்... தாய் தற்கொலை...!

First published: October 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்