ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்... இன்று தொடங்கி வைத்தார் முதல்வர்..!

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்... இன்று தொடங்கி வைத்தார் முதல்வர்..!

கரூர் - முதல்வர் ஸ்டாலின்

கரூர் - முதல்வர் ஸ்டாலின்

50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முதல்வர் மு.க. ஸ்டாலின் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இன்று விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் 50,000 விவசாயிகள் பயனடைவார்கள் என்று முதல்வர் தெரிவித்தார்.

  கரூர் மாவட்டத்திற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து, 50,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கான விழா அரவக்குறிச்சி அருகே தடாகோவிலில் உள்ள மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

  விழா மேடையில் 50 ,000 விவசாயிகளுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதில் 20,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டது.

  அப்போது பேசிய அவர், ”எரிசக்தி துறையின் 2021–2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மாநிலத்தின் விவசாய உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இதுவரையிலும் இல்லாத அதிகபட்ச அளவாக ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் 23.9.2021 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் 3,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது.

  அதன் தொடர்ச்சியாக, எரிசக்தித் துறையின் 2022-23ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடனும் நடப்பு நிதியாண்டில் 50,000 எண்ணிக்கையில் புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

  பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதால் இன்று என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை. அந்த மகிழ்ச்சியில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

  நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி எதைச் செய்தாலும் அதிலே ஒரு முத்திரையை பதிப்பார். அந்த வகையில் முத்திரை பதித்திருக்கக்கூடிய இந்த விழாவில் தமிழகத்தினுடைய முதலமைச்சர் என்கிற முறையில் கலந்து கொள்வதிலேயே நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

  தமிழக அரசினுடைய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய ஒரு நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. இந்த விழாவின் மூலமாக 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இன்றைக்கு வழங்கக்கூடிய வகையில் இந்த விழா நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு லட்சம் இணைப்புகளைக் நாம் வழங்கியிருக்கிறோம். அத்துடன் சேர்த்து இன்று ஐம்பதாயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

  எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கிறபோது, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இணைப்புகள், அதிலும் இந்த குறுகிய காலத்திற்குள்ளாக, 15 மாத காலத்திற்குள்ளாக வழங்கி இருக்கிறோம் என்று சொன்னால், இதைவிட ஒரு மிகப்பெரிய சாதனையை நான் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

  Also see... 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிப்பது கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் தமிழகத்தின் உழவர்களை மகிழ்விக்கும் வகையில், ஓர் ஆண்டில் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்குவோம் என்று ஏற்கனவே அறிவித்தோம். அப்போது எல்லோரும் என்ன நினைத்தார்கள் என்றால், இது நடக்குமா? சாத்தியமா? முடியுமா? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

  நடக்குமா என்று கேட்பதை நடத்திக் காட்டுவதும் - சாத்தியமா என்று கேட்பதை சாத்தியமாக்குவதும், முடியுமா என்பதை முடித்துக் காட்டுவதும்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதை யாரும் மறந்துவிட வேண்டாம். இனிமேல் அப்படி ஒரு எண்ணம், ஒரு சந்தேகம் யாருக்கும் வரவேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.

  நம்முடைய செந்தில்பாலாஜி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். கடந்த பத்தாண்டு காலம் ஒரு ஆட்சி நடந்தது, நடந்தது என்று சொல்ல முடியாது, இருந்தது. அது எப்படி இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த பத்தாண்டு காலத்தில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் மட்டும்தான் அவர்களால் வழங்கப்பட்டன. ஆனால் நாம் இந்த பதினைந்து மாத காலத்தில், 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம்.

  Also see...இடி மின்னல் வந்தால் தற்காத்துக்கொள்வது எப்படி?

  மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து வசதி தரப்பட்டிருக்கின்ற காரணத்தால் பெண்களின் பொருளாதார வலிமை கூடியிருக்கிறது. பல்வேறு சமூகநலத் திட்டங்களின் மூலமாக வாழ்க்கைத் தரம் தமிழகத்தில் நிலையானதாக அமைந்திருக்கிறது.

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது, இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இன்றைய தேதி வரை பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

  1. தமிழ்நாட்டு மக்களுக்காக மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் திறப்பு. அதில் பெறப்பட்டிருக்கின்ற புகார்களுக்கு 99 விழுக்காடு உடனடித் தீர்வு.

  2. உயர் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் தவிர்ப்பதற்காக புதியதாக 8,905 மின் விநியோக மின்மாற்றிகள் நிறுவப்பட்டன.

  3.மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, 23 ஆயிரத்து 780 புதிய மின் விநியோக மின்மாற்றிகள் நிறுவப்பட்டன.

  4. அகில இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதல் இடம்.

  5. 1,528 மெகாவாட் புதிய சூரிய மின்சக்தி மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு, இந்திய அளவில் சூரியஒளி மின் உற்பத்தியில் நான்காவது இடம்.

  6. 11.09.2022 அன்று, மரபுசாரா எரிசக்தியின் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் நுகர்வில் 74 விழுக்காடு பங்களிப்பு செய்து இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறோம்.

  மக்களுக்கான சேவையே மகத்தான சேவை என்ற ஒரே குறிக்கோளோடு, மழைநேரங்களிலும், இயற்கை இடர்பாடுகளின்போதும், தன்னலமின்றி தொடர்ந்து சேவைசெய்து வரும் தன்னிகரற்ற அனைத்து மின்வாரியத் தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று பேசினார்.

  Also see...சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு...

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவுக்கு செல்ல தனி பாதையும், முதலமைச்சரின் வாகனம் வருவதற்கு தனி பாதையும்  அமைக்கப்பட்டிருந்தது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CM MK Stalin, Electricity, Farmer, Tamil Nadu