HOME»NEWS»TAMIL-NADU»chief minister says we will avoid road accidents sur

விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க உதவுங்கள் - முதலமைச்சர் வேண்டுகோள்

சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மனதளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க உதவுங்கள் - முதலமைச்சர் வேண்டுகோள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:

தமிழக அரசின் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் இன்று 18-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பிப்ரவரி 17-ந் தேதி வரை ஒரு மாத காலம் சாலை பாதுகாப்பு- உயிர் பாதுகாப்பு என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்கப்படும்.

சாலை பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைப்பிடித்து, விபத்தினை தவிர்ப்பதாகும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மனதளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.



தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது குறித்த உறுதிமொழி எடுத்தல், ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துதல், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்துதல், சிறப்பு வாகன சோதனைகள் நடத்துதல், தொடர் விபத்து சாலைகளை கண்டறிதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்தல், ஈர்ப்பு இசை தயாரித்து அகில இந்திய வானொலி மூலமாக ஒலிபரப்புதல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்து குழுக்கள் ஏற்படுத்தி போக்குவரத்து விதி மீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், சாலை பாதுகாப்பு பணிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த மூன்று மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல்துறை ஆணையரகத்திற்கும் முதலமைச்சரின் விருது வழங்குதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மேலும், ‘சாலை விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்காக, தமிழ்நாடு சாலை பாதுகாப்பு இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர்

கடந்த ஆண்டு குடியரசுதினத்தன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த அலங்கார அணி வகுப்பு ஊர்தி, அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகத்தின் பின் அட்டையில் சாலை பாதுகாப்பு செய்திகள் அச்சிடப்பட்டு மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்றத்தின் சாலை பாதுகாப்பு குழுவின் வழிகாட்டுதலின் படி, 2016-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு 2020-ம் ஆண்டில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 54.04 சதவீதமாகவும் மற்றும் சாலை விபத்துகள் 38.23 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மேலும், ஒவ்வொரு 10 ஆயிரம் வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவிலிருந்து 2020-ம் ஆண்டில் 2 நபர்களாக குறைந்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடித்து, விபத்துகளை தவிர்த்து, விலை மதிப்பற்ற தங்களின் உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட உதவ வேண்டும்.’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Published by:Suresh V
First published: