ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி

நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது.

 • Share this:
  சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திறந்து வைத்தார். தலைவாசல் கூட்டு ரோட்டில் 1100 ஏக்கரில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 118 கோடி ரூபாய் மதப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் 5வது கால்நடை மருத்துவக் கல்லூரியையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

  இந்த பூங்கா 3 பிரிவுகளாக அமைகிறது. முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

  மேலும் நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

  3-ம் பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இவ்வளாகம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட வளாகமாக அமையும்.

  இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக வெங்கடேச பெருமாள் கோயில் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் பங்கேற்க வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  பின்னர் யாகசாலை பூஜையிலும், திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

  திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இதையடுத்து, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற அதிமுகவின் மகளிர் பூத் கமிட்டிக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ஆத்தூர் தாலுகாவில் உள்ள தலைவாசல் இனி தனி தாலுகாவாக செயல்படும் என அறிவித்தார். அதிமுக அரசு திட்டங்களை செயல்படுத்தும் அரசாக திகழ்வதாக கூறிய அவர், திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம் என்றும் தெரிவித்தார். எதை சொல்கிறதோ அதை நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.

   
  Published by:Vijay R
  First published: