இன்றைய உலகம் ஆண்ட்ராய்டு உலகமாக இருந்துவருகிறது. நேற்றுவரை சாதரணமாக இருந்த ஒருவர் ஒரே நாளில் சமூக வலைதளங்கள் மூலம் உலகப் பிரபலமாக ஆகும் சூழலும் தற்போது உள்ளது. தமிழ்நாட்டிலும் ட்விட்டர், ஃபேஸ்புக், டிக்டாக் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அதுபோல, தமிழ்நாட்டில் ஏராளமான யூட்யூப் சேனல்கள் இயங்கிவருகின்றன. அவர்கள் அடிக்கடி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அப்படி வெளியாகும் பேட்டிகளில் அவ்வப்போது நாம் கண்டுகொள்ள தவறியிருந்த விலை மதிப்பில்லாத மாணிக்கங்கள் நமக்கு அறிமுகம் ஆகின்றன. அப்படிதான், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஸ்வினி என்ற நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த பெண் ஒருவர், தன்னை கோயிலில் சாப்பிட அனுமதிக்கவில்லை. தங்களை ஒதுக்குகிறார்கள் என்று வேதனையைப் பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. உடனே, அறநிலையத்துறை அமைச்சர் அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்று அவர் அருகில் அமர்ந்து உணவு உண்டார். அதன்தொடர்ச்சியாக அந்தப் பெண் மற்றும் அவரது சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவர்களின் வீடுகளுக்கு பட்டா வழங்கினார்.
அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏசியாவில் யூட்யூப் தளத்தில் வடசென்னைப் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் என்று சிறுவன் பேசியிருந்தான். அந்தச் சிறுவனிடம் உனக்கு பிடிக்காதவர்கள் யார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘நான் யாரையும் வெறுக்க மாட்டேன். யாரும் யாரையும் வெறுக்கக் கூடாது. அனைவர் மீது அன்பு செலுத்த வேண்டும். சமூகத்தின் புறக்கணிப்பு ஒருவரை வன்முறையாளராக மாற்றும்’ என்று புத்தர், காந்தி போன்ற மகான்களின் வார்த்தைக்கு நிகரான கருத்துகளைப் பேசியிருந்தான்.
ஜெயலலிதா பிறந்தநாள்.. தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை..
அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. அதனையடுத்து, பல யூட்யூப் சேனல்களும் அந்தச் சிறுவனையும் அவனது பெற்றோரையும் அழைத்து பேட்டியெடுத்தனர். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அப்துல் கலாம் சிறுவனையும், அவனது பெற்றோரையும் நேரில் அழைத்துப் பாராட்டினார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொளி கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன்.
சாதி, மதப் பாகுபாடுகளைக் கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.