சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்கு ரயில்வே துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக ஜேசிபி எந்திரங்களை கொண்டு வந்ததால் பொதுமக்கள் வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும் அல்லது தமிழக அரசால் மாற்று இடம் வழங்குவதற்கு உறுதி அளித்தால் மட்டுமே தற்போது உள்ள வீடுகளை அகற்றுவதற்கு அனுமதி அளிப்போம் என்று கூறி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நேற்று திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோன்று டெல்லி சென்று இருக்கும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வீடுகள் இடிக்கக்கூடிய மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை வீடுகள் இடிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் நேரில் சென்று மனு கொடுத்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் வீடுகளை இடிப்பதற்காக இன்று ரயில்வே துறையினர் சார்பாக ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்ததால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
இதனிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதி மக்களை சந்தித்து பேசி வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, மயங்கி விழுந்த சீமானுக்கு முதல் உதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு இயல்பான நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து சீமான் வீடு திரும்பினார். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சீமானுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். இதுகுறித்த சீமான் ட்விட்டர் பதிவில், ‘எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.