• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் : மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் : மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மு.க.ஸ்டாலின் ஆய்வு

மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • Share this:
    தமிழ்நாட்டில் 3ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சென்னையில் தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

    தமிழகத்தில் கடந்த 12 மற்றும் 19ஆம் தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91ஆயிரம் பேருக்கும், 19ம் தேதி 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 3ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம், 20 ஆயிரம் மையங்களில் நடைபெற்றது.

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இதேபோல், பட்டாளத்தில் நடைபெற்ற முகாமை முதலமைச்சர் ஆய்வு செய்த நிலையில், மாநகராட்சி சார்பில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை ஆணையர் ககன்தீப் சிங் பேடி விளக்கினார்.

    இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாமை மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஐசிஎம்ஆர் (ICMR) வழிகாட்டுதல்களை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

    திருச்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், நேரு ஆகியோர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் நீட் தேர்வெழுதிய ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும், 80 சதவீத மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனையில், 200 மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் முன்னையம்பட்டியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் இன்னும் 3ஆவது அலை தொடங்கவில்லை என கூறினார். மதுரை மாவட்டத்தில் 1,200 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    திண்டுக்கல்லில் தடுப்பூசி போட வந்த அனைவருக்கும் 200 ரூபாய் மதிப்பிலான இரு தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 3 நபர்களுக்கு தங்க நாணயம், செல்போன், பட்டுப் புடவை, 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பெட்டகம் வழங்கப்பட்டன.

    தேனி மாவட்டம் கீழவடகரையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் பேரீச்சம்பழம் வழங்கப்பட்டது. எருமலை நாயக்கன்பட்டியில் தடுப்பூசி போட்டவர்களுக்கு சில்வர் தட்டு, குலுக்கல் முறையில் 3 பேருக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.

    Must Read : தடுப்பூசி அதிக அளவில் போடப்பட்ட முதன்மை மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு - மா.சுப்பிரமணியன்

    இந்நிலையில், ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: