மறைந்த கி.ரா. வுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கி.ராஜநாராயணன்

பிரபல எழுத்தாளரும் சாசித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் முதுமை காரணமாக புதுச்சேரியின் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், கி.ராவுக்கு அரசு சாரிபில் கோயில் பட்டியில் சிலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) அவர்கள் ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர்; வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

  மறைந்த எழுத்தாளர் கி.ரா. அவர்கள் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும் அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடைய புகைப்படங்கள் - படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும் பொது மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்.

  கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

  கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், 1923-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவலில் பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது மகனாக பிறந்த இவர், 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

  1958-ம் ஆண்டு சரஸ்வதி இதழில் 'மாயமான்' என்ற சிறுகதையை, தனது 35-வது வயதில் எழுதினார். இதையடுத்து கரிசல் மண் மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் துன்பங்கள், ஏமாற்றங்களை தனது எழுத்து மூலம் உலகறியச் செய்தார். சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமிய கதைகள் என இலக்கியத்தில் முத்திரை பதித்த கி.ரா.வின், கதைகள் முன்னணி இதழ்களில் வெளிவந்தன.

  பின்னர், 2007-ம் ஆண்டு இவரின் படைப்புகள் அனைத்தும் 944 பக்கங்களை கொண்ட "நாட்டுப்புறக்கதை களஞ்சியம்" என்ற படைப்பாக வெளிவந்தது. 2009-ம் ஆண்டில் மட்டும் கி.ராவின் 30 புத்தகங்கள் வெளிவந்தன. கோமதி, கண்ணீர், கரிசல் கதைகள், கிராமியக் கதைகள், கொத்தைபருத்தி, புதுவை நாட்டுப்புறக் கதைகள், மாமலை ஜீவா போன்றவை இவரின் முக்கிய படைப்புகள் ஆகும்.

  Must Read : ‘தமிழ் இலக்கிய உலகின் ஆகச் சிறந்த கதை சொல்லி...’ கி.ரா வுக்கு ராமதாஸ் இரங்கல்

   

  1991-ம் ஆண்டு "கோபல்லபுரத்து மக்கள்" என்ற நாவலுக்காக கி.ரா.-வுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. மேலும், இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கிய தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கிய சாதனை சிறப்பு விருதுகள் இவரின் எழுத்துக்கு கிடைத்த அக்கீகாரமாக அமைந்தன. 7-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகும் அளவிற்கு தன் திறமையால் சாதனைபடைத்தவர்.

  இந்நிலையில், சொந்த ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில், கி.ரா - வின் இறுதிச்சடங்கு நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
  Published by:Suresh V
  First published: