ஆக்சிஜன், தடுப்பூசிகளை தமிழகத்திலே உற்பத்தி செய்ய நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

  • Share this:
    ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து, ரெம்டெசிவிர் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளிலே இன்று முதல் கிடைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து, நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் துவக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), மேற்காணும் அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும் என்றும், குறைந்த பட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கருத்துகளை 31.05.2021க்குள் கோரியுள்ளது.

    அவ்வாறு பெறப்படும் விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: