• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நிரம்பும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி : இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நிரம்பும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி : இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த களநிலவரத்தை அறியவுள்ளார்.

  • Share this:
    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

    கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளத்தின் போது, முன் அறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 20.79 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால், லேசான மழை பெய்தாலே ஏரி நிரம்பும் நிலை உள்ளது. விரைவில் பருவமழை தொடங்கவுள்ளதால் ஏரிகளின் நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

    இந்த ஆய்வின் போது, ஏரியில் உள்ள கதவணைகள் மற்றும் கரைகளின் நிலை, பருவ மழைக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் வெள்ள தடுப்பு தளவாடங்களின் இருப்பு குறித்தும் பார்வையிடுகிறார். அத்துடன், கதவணைகள் முறையாக பராமரிப்பு செய்யப்படுகின்றனவா? அதன் இயக்கம் சரியாக உள்ளதா? என்பதையும் முதலமைச்சர் ஆய்வு செய்கிறார்.

    மேலும், புழல் ஏரியிலும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த களநிலவரத்தை அறியவுள்ளார். இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச்சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில், நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது.

    இந்நிலையில் பிற்பகலில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, மேகமூட்டம் காணப்பட்டது. இரவு நேரத்தில் மிதமான மழை பெய்தது. பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான சோத்துப்பாறை, கும்பக்கரை, மஞ்சளாறு, லட்சுமிபுரம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் பெரியகுளம் பகுதியில் இதமான சூழல் ஏற்பட்டது. திடீரென இரவில் பெய்த கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    செம்பரம்பாக்கம் ஏரி


    Must Read : உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்கின்றனர்

    இதேபோல, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலை கனமழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: